4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே வந்த மோடி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று  ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

 

கடந்த 4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே பிரதமர் மோடி வருகை தந்திருப்பதால், அவர் முறையாக நாடாளுமன்றத்துக்கு வருகைதர உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்றுத்தாக்கல் செய்தார்.

 

மோடிக்கு எதிராக இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

 

கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒட்டுமொத்தமாகவே 19 நாட்கள்தான் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவ்வாறு வந்தபோதிலும் சிலமுறையே மோடி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அரசின் மசோதா ஒன்றை அறிமுகம் செய்யும் போதும், 5 முறை தனது அமைச்சர்களை அறிமுகம் செய்யும் போதும், நன்றி தெரிவிக்கும் தீர்மானித்தின் மீது 6 முறையும், சிறப்பு விவாதத்தின் மீது 2 முறையும் மோடி பேசியுள்ளார்.

 

அதேசமயம், பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் தான் சார்ந்திருக்கும் பாஜக கட்சி சார்பில் நடந்த 800 பேரணிகளில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.

 

நாட்டில் நிலவும் பல முக்கியப் பிரச்சினைகளின் போதும், அதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, வங்கி மோசடி, பசு குண்டர்கள் அட்டூழியம், பெண்கள் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் மீது மோடி கருத்து தெரிவிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோது அவர் மவுனியாகவே இருந்துவிட்டார்.

 

மன் கி பாத் நிகழ்ச்சியில் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் பேசும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. நாடாளுமன்றத்தில் உள்ள அவரின் அலுவலகத்துக்கு வரும் மோடி, அவைக்கு வருவதில்லை. ஆதலால், நீதிமன்றம் தலையிட்டு, பிரதமர் மோடி முறையாக நாடாளுமன்றத்துக்கு வருகைதர உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருக்கிறேன்.

இவ்வாறு சஞ்சய் சிங் தெரிவித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top