சென்னையில் 3 நாட்களாக ஜாக்டோ – ஜியோ நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு

 

 

கடந்த 3 நாட்களாக  சென்னையில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

 

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் கடந்த 11-ம் தேதி தொடங்கினர். பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், அரசு தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வராததால் நேற்று 3-வது நாளாக அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

 

முன்னதாக 2-வது நாளான 12-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த 2 நிர்வாகிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அன்றைய தினம், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆதரவு தேரிவித்தனர்.

 

போராட்டத்தை கைவிடுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளின் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரெங்கராஜன் ஆகியோர் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

 

 தொடர்ந்து 3 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன், பகுதிநேர சிறப்பாசிரியர் சங்க மாநில தலைவர் சேசுராஜா உட்பட 4 பேர் நேற்று மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

 

இந்நிலையில் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கோட்டைக்கு சென்று முதல்வரை சந்திக்க ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் முடிவுசெய்தனர். இதைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிர்வாகிகள் அனைவரும் மெரினா கடற்கரையில் இருந்து பேரணியாக கோட்டை நோக்கி புறப்பட்டனர். நேப்பியர் பாலம் அருகே சென்றபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

 

கோட்டை நோக்கிச் செல்ல போலீஸார் அனுமதி அளிக்காததால் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மெரினா கடற்கரை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சாலைமறியலில் ஈடுபட்ட ஜாக்டோ நிர்வாகிகள் அனைவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

 

இதற்கிடையே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று (ஜூன் 14-ம் தேதி) நடைபெறும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நேற்று இரவு அறிவித்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top