மறு பிரேத பரிசோதனை; 5 பேரின் உடல்கள் ஒப்படைப்பு: இருவரின் உடல்களை வாங்க மறுப்பு

 

 

உயர் நீதிமன்ற [மதுரை கிளை]  உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் பலியான 7 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. 2 பேர் சடலங்களை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.

 

தூத்துக்குடியில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதிகளில் போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

 

இந்நிலையில், 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்தனர். உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் பகல் 1 மணியளவில் இப்பணி தொடங்கியது.

 

சண்முகம், செல்வசேகர், கார்த்திக் ஆகிய மூவரது உடல்களும் நேற்று முன்தினம் இரவே பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இறுதி சடங்குகளும் இரவே நடைபெற்றன. நேற்று அதிகாலை 2 மணி வரை பிரேத பரிசோதனை தொடர்ந்து நடைபெற்றது. இதனை தொடர்ந்து கந்தையா மற்றும் காளியப்பன் ஆகியோரது உடல்களை அவர்களது குடும்பத்தினர் நேற்று காலை பெற்றுச் சென்று இறுதிச் சடங்குகளை செய்தனர்.

 

ஆனால், ஸ்னோலின், தமிழரசன் ஆகியோரது உடல்களை பெற அவர்களது உறவினர்கள் மறுத்து வருகின்றனர். ஸ்டெர் லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீஸார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று கூறியது: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 7 பேரின் சடலங்களுக்கும் சிறப்பு அனுமதி பெற்று அதிகாலை 2 மணி வரை மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 3 பேரின் சடலங்கள் இரவிலும், 2 பேரின் சடலங்கள் நேற்று காலையிலும் ஒப்படைக்கப்பட்டன.

 

மேலும், 2 பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனை முடிந்து தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை பெற அவர்களது உறவினர்கள் இதுவரை வரவில்லை. மீதமுள்ள 6 பேரின் சடலங்களும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு வார காலம் பாதுகாப்பாக வைக்கப்படும். நீதிமன்றம் அடுத்து என்ன கூறுகிறதோ அதை பின்பற்றி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top