டி.ஜி.பி.க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு;கைது நடவடிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைபிடியுங்கள்!

 

 

 

தூத்துக்குடி காவல்துறையின் நெருக்கடி தொடர்ந்துகொண்டே இருக்கிறது .தூத்துக்குடி வாழ்பொதுமக்கள் இரவில் சரியாக தூங்க முடியவில்லை.போலீஸ் எந்த நேரத்திலும் வீடுபுகுந்து ஆட்களை தூக்குவார்கள். ஆண்களை அடித்து சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தேவையில்லாமல் வழக்கு போடுகிறார்கள்  ஒருவரை கைது செய்வது குறித்து என்ன என்ன அடிப்படைகள் பின்பற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியிருக்கிறது

 

இந்த நிலையில் ,குற்ற வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் நகலை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கும்படி டி.ஜி.பி.க்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில், சென்னையை அடுத்துள்ள உணமன்சேரியை சேர்ந்த வி.நந்தமணி புகார் மனு கொடுத்தார்.

 

அதில், ‘2010-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி இரவு எங்கள் ஊரில் உள்ள உறவினர் வெங்கடேசன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தேன். அப்போது, வெங்கடேசனையும், என்னையும் கூடுவாஞ்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், பூபாலன் மற்றும் போலீசார் பிடித்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து, சிறையில் அடைத்தனர். எந்த ஒரு காரணமும் இல்லாமல், என்னை கைது செய்து, சித்ரவதை செய்து, சிகிச்சை வழங்காமல் சிறையில் அடைத்தது மனித உரிமை மீறலாகும். எனவே, இவர்களை தண்டிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

 

இந்த புகாரை மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இதற்கு பதில் அளித்த போலீசார், ‘கணேசன் என்பவரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் வெங்கடேசன், நந்தமணி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கைது செய்தபோது, மனித உரிமை மீறல் எதுவும் நடைபெறவில்லை. மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. புகார்தாரர் கோர்ட்டுக்கு அழைத்து செல்லும்போது, அவரது சொந்த காரில் தான் வந்தார். அவர் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார். சட்டப்படிதான் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது’ என்று கூறியிருந்தனர்.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உறுப்பினர் நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘புகார்தாரரை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் கொடுமை செய்துள்ளார். கண்ணியத்துடன் நடத்தாமல், மனித உரிமையை மீறி செயல்பட்டுள்ளார். எனவே, புகார்தாரர் நந்தமணிக்கு, ரூ.50 ஆயிரத்தை 4 வாரத்துக்குள் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். அந்த தொகையை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். மேலும், குற்ற வழக்கில் எவ்வாறு கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஜோகிந்தர் குமார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் நகலை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கையாக டி.ஜி.பி. அனுப்பி வைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top