பாஜக பின்னடைவு; 10 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்

 

 

நான்கு மக்களவை தொகுதி மற்றும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. உ.பி.யில் பாஜக வெற்றி பெறுமா அல்லது தொடர்ந்து 3-வது தொகுதியை இழக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

உத்தரபிரதேச மாநிலம், கைரானா தொகுதி பாஜக எம்.பி. ஹுக்கும் சிங் காலமானார். அந்தத் தொகுதியில் ஹுக்கும் சிங்கின் மகள் மிரிகங்கா சிங் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் களமிறங்கி உள்ளார். இவருக்குக் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

 

இந்த தொகுதியில் ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளரால் தொட முடியாத அளவு முன்னிலை வித்தியாசம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக வேட்பாளரை விட, தபசம் ஹசன் 36,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

 

உ.பி.யின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் 6,211 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 

பீகார்

பீகார் மாநிலத்தின் ஜோகிஹாத் சட்டப்பேரவைத் தொகுதியில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெற்றி  பெற்றுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாபாவாஷ் ஆலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் முர்ஷித் ஆலத்தைக் காட்டிலும் 41 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடகம்

கர்நாடக மாநிலம் ராஜராஜேஸ்வரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் என். முனிரத்னா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் துளசி முனிராஜு கவுடாவைக் காட்டிலும் 41162 ஆயிரம் வாக்குகள் கூடுதலா பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கேரளா

கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சாஜி செரியன் 67,303 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் 46347 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் பிள்ளை 35270 வாக்குகள் பெற்றார்.

பஞ்சாப்

பஞ்சாப் மாநில் ஷாகோட் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. இங்கு போட்டியிட்ட பாஜகவின் கூட்டணிக்கட்சியான அகாலிதளம் தோல்வி முகத்தில் உள்ளது. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அகாலிதள வேட்பாளர் நயாப் சிங் புகார் கூறியுள்ளார்.

மேகாலயா

மேகாலயா அம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா வெற்றி பெற்றுள்ளார்.

நாகலாந்து

நாகலாந்து மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சி 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னணி பின் தங்கியுள்ளது.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலம் கோமியா சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார். சில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் அகில இந்திய ஜார்கண்ட் மாணவர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் பண்டாரா – கோண்டியா மக்களவை தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

பால்கர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் 6,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top