மோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது

 

பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதுதான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது என மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

 

பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாயை தொட்டுள்ளது. கர்நாடக தேர்தலுக்காக 20 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட விலையேற்றம், தேர்தல் முடிந்ததும் தினமும் ஏறி வருகிறது. திடீர் திருப்பமாக இன்று பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைந்தது.

 

ரூபாய் கணக்கில் தினமும் விலை ஏறி, ஒரு பைசா மட்டுமே குறைந்துள்ளதை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் விராட் கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றுக்கொள்வதாக மோடி தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

 

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்டி #FuelChallenge என்ற சவாலை அளித்திருந்தார். இந்நிலையில், இன்றும் இதே போல, பெட்ரோல் விலை ஒரு பைசா குறைவை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

 

அன்புள்ள பிரதமருக்கு,

 

இன்று பெட்ரோல், டீசல் விலையை ஒரு பைசா குறைத்துள்ளீர்கள். ஒரு பைசா?

 

இது தான் உங்களது குறும்பு யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது மற்றும் மோசமான சுவை கொண்டது.

 

பின்குறிப்பு:- ஒரு பைசா விலை குறைப்பு என்பது நான் கடந்த வாரம் விடுத்த சவாலுக்கு சரியான எதிர்வினை அல்ல

 

இவ்வாறு ராகுல் காந்தி கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top