சர்வாதிகார போக்குள்ள மோடி அரசுக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும்?’- சந்திரபாபு நாயுடு கேள்வி

 

 

சர்வாதிகார மனப்போக்குடன் மாநிலங்களை அணுகும் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு நாம் ஏன் வரி வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மாநாடு விஜயவாடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நடந்தது. இந்த மாநாட்டின் கடைசி நாளான நேற்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

அதில் முக்கியமாக மாநிலங்களின் நிதிச்சுழலை மத்திய அரசு மிகவும் பலவீனப்படுத்துகிறது, எந்தத் திட்டங்களுக்கும் போதுமான நிதி வழங்குவதில்லை எனக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

 

தன்னிச்சையாகச் செயல்படும் மோடி அரசு மாநிலங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. கூட்டாட்சி என்பது வெறும் காகிதத்தின் அளவில் மட்டுமே பார்க்க முடிகிறது. சர்வாதிகார மனப்போக்குடன் செயல்படும் மோடி அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது, மக்களுக்கு எதிரான முடிவுகளை எடுக்கிறது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

 

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை என்பதால் மத்திய அரசுடன் கூட்டணியை முறித்தது முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலங்கு தேசம் கட்சி வெளியேறியது. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியது. அதன்பின் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது, பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்து வருகிறார்.

 

இந்நிலையில், இந்த மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது மாநிலத்தின் நலனுக்காகத்தான். ஆனால், மாநிலங்களை அடக்கும் நோக்கில் சர்வாதிகார மனப்போக்குடன் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

 

ஆனால், நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை, எங்களின் போராட்டம் ஓயாது.

 

மாநிலங்களுக்குத் தேவையான நிதியையும், திட்டங்களுக்குத் தேவையான நிதியையும் மத்திய அரசு வழங்குவதில்லை. எங்களின் அமராவதி நகர் அமைப்பதற்கும் நிதி வழங்கவில்லை. அப்படி இருக்கும் நாங்கள் ஏன் வரி வசூலித்து, மோடி அரசுக்குக் கொடுக்க வேண்டும்?

 

தெலங்கானா ஹைதராபாத்தில் இருந்து பெரும்பாலான வருவாயைப் பெறுகிறது, கர்நாடகா பெங்களூரில் இருந்தும்,தமிழகம் சென்னையில் இருந்தும் பெறுகிறது. ஆந்திராவுக்கு எனத் தனியாக தலைநகரம் ஏன் உருவாக்கிக்கொள்ளக் கூடாது.

 

குஜராத்தில் உள்ள தோலிரா நகரை டெல்லியைக்காட்டிலும் 6 மடங்கு பெரிதாகவும், ஷாங்காய் நகரைக் காட்டிலும் பெரிதாக உருவாக்குவேன் எனப் பிரதமர் மோடி கூருகிறார். இதற்காக பாஜக ரூ.95 ஆயிரம் கோடி செலவு செய்கிறது. ஆனால், ஆந்திர மாநிலம் அமராவதி நகருக்கு மட்டும் செலவு செய்ய நிதி வழங்க மறுத்து பாகுபாடு காட்டுகிறது மோடி அரசு.

 

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வேலையின்மையின்மை 3.4 சதவீதம் இருந்தது. ஆனால், தற்போது 6.23 சதவீதமாக அதிகரித்துவிட்டது. மோடி மக்களிடம் வாக்குறுதி அளித்த கூட்டுமுயற்சி, ஒட்டுமொத்த வளர்ச்சி எங்கே போய்விட்டது.

 

ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும் போது, தெலங்கானாவுக்கும், ஆந்திராவுக்கும் நீதிவழங்குமாறு செயல்படுங்கள் என்று காங்கிரஸ் அரசைக் கேட்டுக்கொண்டோம்.

 

ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அது இரு மாநிலங்களுக்கும் இழப்பாக அமைந்தது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 25 இடங்களைக் கைப்பற்றும், தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top