ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு சிப்காட் நிறுவனம் அளித்த நிலம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

 

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார கிராம மக்கள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

 

பாதிக்கப்பட்ட மக்களை தமிழக அரசின் சார்பில் யாரும் சந்திக்கவில்லை என புகார் எழுந்த நிலையில், திங்கள்கிழமை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பெயருக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்பு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மேலும், ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினரும் முதல்வரிடம் மனு அளித்தனர்.

 

இந்த நிலையில் இறந்த 13 பேர்களின் உடல்களை ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடினால் ஒழிய வாங்கமாட்டோம் என்று துணை முதல்வர் தூத்துக்குடி வருகையின் போது மக்கள் சொல்லியதால். தற்போதைய நிலைமையை சமாளிக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு ஒத்துக்கொண்டுள்ளது.

 

‘தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்மந்தப்பட்ட நிபந்தனைகளை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தினால் தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆலையை நிரந்தரமாக மூடகோரி வந்தனர்’ ஆகையால்தான் இந்த அரசு இந்த ஆலையை மூடுகிறது என்ற வகையில் தமிழக அரசு அறிக்கை இருக்கிறது.

 

அதாவது, ஸ்டெர்லைட் ஆலை அரசு சொன்ன நிபந்தனைகளை,மாசு கட்டுப்பாடு வாரியம் சொன்ன நிபந்தனைகளை நிறைவேற்றாததால்தான் தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை மூட கோரிக்கை வைத்தது போல் தமிழக அரசு சொல்கிறது.

 

ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் சென்று இதற்கு பதில் அளித்து ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதி வாங்கி வரும் தமிழக அரசு கண்துடைப்பு அறிக்கையை விட்டிருக்கிறது என்று தூத்துக்குடி மக்கள் சொல்கிறார்கள்.

 

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

 

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஸ்டெர்லைட் ஆலைக்காக தூத்துக்குடி சிப்காட் தொழில் வளாகத்தில் 342.22 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட்டுள்ளதையடுத்தும், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறச் சூழல் மற்றும் அப்பகுதி மக்களின் உடல்நலம் பாதிப்பு ஆகியவை குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள எதிர்ப்பைக் கருத்தில் கொண்டும், பொதுநலன் கருதி சிப்காட் நிறுவனம் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு அளித்துள்ள நில ஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top