டி.ஜி.பி தூத்துக்குடி வருகை; போலீசாரின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து ஆலோசனை: கலெக்டர் பேட்டி

 

 

ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்துள்ளவர்கள் தூத்துக்குடி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை போலீஸ் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் பார்வையிட்டார்.அதைத்தொடர்ந்து கலெக்டர் பேட்டிஅளித்தார்

 

போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில்   13 அப்பாவி பொதுமக்கள் பலியாகி,  பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற இந்நிலையில், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) டி.கே ராஜேந்திரன் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.

 

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த அவர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.”ஈவு, இரக்கம் இன்றி பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு இப்போது நலம் விசாரிக்க வருவது எத்தனை பேர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் அவர்களையும் எப்படி கொள்வது என்று பார்க்கவா” என்று  வெளியே நின்ற கோபம் கொண்ட மக்கள் பேசிக்கொண்டார்கள்.

 

வெளி மாவட்ட போலீசாரை குறைப்பது குறித்து டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரனிடம்  ஆலோசனை நடத்தி விட்டு கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

 

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மற்ற பகுதிகளில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்கள் அன்றாட பணிக்கு திரும்பியுள்ளனர். அத்யாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

 

வெளி மாவட்ட போலீசாரை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தற்போது 144 தடை உத்தரவு தேவை இல்லை என்பதால் நீட்டிக்கப்படவில்லை. சூழலை கண்காணித்து வருகிறோம்.

 

தேவைப்பட்டால் மீண்டும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல் பரிசோதனை முடிவடைந்துள்ளது. எஞ்சிய 6 பேரின் பிரேத பரிசோதனை நடக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார்.

 

இதையடுத்து தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இவை இல்லாமல் ஆலை இயங்க முடியாது. எனவே பொதுமக்கள் அரசின் உறுதியை ஏற்று முழுவதுமாக இயல்பு நிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.

 

தற்போதைய சூழ்நிலையை அரசு கண்காணித்து வருகிறது. இணையதள சேவை வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top