தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து திருச்செந்தூரில் நாளை மறுநாள் பேரணி: மீனவர் கூட்டமைப்பு அறிவிப்பு

 

 

தூத்துக்குடி மாவட்ட அனைத்து பரதர் மீனவர் கூட்டமைப்பு கூட்டம் தூத்துக்குடி திரேஸ்புரம் தோமையார் ஆலய வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டமைப்பு தலைவர் டெப்பா சந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அமைதியாக போராடிய அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும், துப்பாக்கி சூட்டையும் வன்மையாக கண்டிக்கிறோம். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மற்றும் அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.கடந்த 22-ந் தேதி நடந்த கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.

 

கலவரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நஷ்டஈடும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான அரசு பணியும் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணமும், மேல் சிகிச்சையும் அரசு சார்பில் வழங்க வேண்டும்.

 

தூத்துக்குடி மாநகரத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும். தூத்துக்குடி நகர் பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, வீடு புகுந்து அத்துமீறி அப்பாவி இளைஞர்களை போலீசார் கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

 

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் டெப்பா சந்திரன் கூறுகையில், ‘துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வருகிற 29-ந் தேதி செவ்வாய்க்கிழமை வீரபாண்டியன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வரை மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்’ என்றார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top