எடப்பாடி பழனிசாமியும், டிஜிபி ராஜேந்திரனும் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்- மு.க.ஸ்டாலின்

 

 

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், டிஜிபி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தமிழக அரசு மீது கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்த சம்பவத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

 

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் முதல்வரை சந்திக்க அவரது அறைக்குச் சென்றனர். அப்போது அவரை போலீஸார் மடக்க முயன்றனர். அவர்களை தள்ளிவிட்டு ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சென்றனர்.

 

முதல்வர் அறைக்குச் சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே முதல்வரைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அனைத்து எம்.எல்.ஏக்களும் சந்திக்க முயன்றனர். இதனால் போலீஸார் அனுமதிக்காத நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் அறை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து வெளியே வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் சாலைக்கு வந்தனர். தலைமைச் செயலகம் எதிரே திடீரென ஸ்டாலின் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்தனர். இதனால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 

இதையடுத்து போலீஸார் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

பின்னர் போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

“தூத்துக்குடிக்கு சென்றதற்காக என் மீது வழக்கு போட்டுள்ளனர், வழக்கு மட்டுமல்ல, துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன் , எந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்துள்ளார்களோ அந்த குண்டை என் மீது வீசி கொன்றால் கூட மனப்பூர்வமாக நெஞ்சை நிமிர்த்தி ஏற்றுக்கொள்வேன். நாளை நடைபெறும் முழு கடையடைப்பு வெற்றிகரமாக நடக்கும்.

 

அதே போல் இந்த செயலற்ற ஆட்சியின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், டிஜிபி டி.கே.ராஜேந்திரனும் பதவி விலகும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும். அமைச்சர் ஜெயக்குமார் துப்பாக்கி சூடு தவிர்க்க முடியாது என்று கூறியுள்ளார் அவர் ஜெயக்குமார் அல்ல பொய்க்குமார்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top