தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம், 2 வார காலத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி தூத்துக்குடி மக்கள் போராட்டக்குழு அமைத்து கடந்த 100 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டக்குழுவை இதுவரை அரசு அதிகாரிகளோ அமைச்சர்களோ சந்திக்கவில்லை. போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவில்லை.

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவையும் அரசு எடுக்கவில்லை, இதனால் பொதுமக்கள் ஆவேச மனநிலையில் இருந்தனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாகச் செல்ல முடிவெடுத்தனனர். இதையடுத்து 144 தடையுத்தரவு போடப்பட்டது. போராட்ட சூழலை அமைதிப்படுத்த அரசுத் தரப்பில் எச்சரிக்கையைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இதனால் நேற்று நடந்த பேரணியில் போலீஸாரின் தடையை மீறி பேரணி தொடர்ந்தது. தடுக்கப்பட்ட போலீஸார் தாக்கப்பட்டனர். போலீஸார் கண்ணீர் புகை குண்டு, தடியடி நடத்தினர். பின்னர் திடீரென துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விதம், காக்கைக்குருவி போல் குறிவைத்து பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை படுகொலை என அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்தனர். இந்தியா முழுவதும் இதற்கு கண்டனம் எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தை பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பியுள்ள மனித உரிமைகள் ஆணையம், இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

 

உரிய விதிகளை பின்பற்றாமல் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்தும் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top