ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை ; உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

 

 

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  பேராசிரியர் பாத்திமா தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுந்தர், அனிதா இன்று மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

 

தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை பாத்திமா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல  மனுவில் கூறியதாவது:

 

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலையில் இரண்டாவது பிரிவு தொடங்குவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் 2009-ம் ஆண்டில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் 2-வது யூனிட்டை அனுமதி பெற்ற இடத்தில் தொடங்காமல் தெற்கு வீரபாண்டியபுரத்தில் நிறுவி வருகிறது. இங்கு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் தனது 2-வது யூனிட்டை அனுமதி பெற்ற இடத்தில் தொடங்காமல், தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் தொடங்குவது சட்ட விரோதம், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு எதிரானது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தைக் கேட்கவில்லை.

 

எனவே ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது யூனிட் தொடங்குவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அனுமதி பெறுவதற்காக தவறான தகவல்களை தெரிவித்ததற்காக ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க வேண்டும்”

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனு கடந்த 17-ம் தேதி நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

இந்நிலையில், இந்த மனுவை நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் அமர்வு இன்று (புதன்கிழமை) விசாரித்தது. இதையடுத்து, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கப் பணி மேற்கொள்ளக்கூடாது எனக்கூறி, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top