ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர்; நிறைவு நாளில் தலைமை நீதிபதியுடன் பணியாற்றினார்

 

ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர்; நிறைவு நாளில் தலைமை நீதிபதியுடன் பணியாற்றினார்

 

ஜூன் மாதம் 22-ம் தேதி பணி ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர், எதிர்வரும் கோடை விடுமுறையால் இன்று தனது இறுதி நாள் பணியை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் இணைந்து நிறைவு செய்தார்.

 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக்காலம் முடிவடைந்து செல்லும்போது, இறுதி பணி நாளில் தலைமை நீதிபதியுடன் இணைந்து பணியாற்றுவது மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அதன்படி ஓய்வு பெற உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர் இன்று கடைசி பணிநாளில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் நீதிமன்ற வளாக எண் 1-ல் வழக்குகளை கையாண்டார். வழக்கமாகவே நீதிமன்ற எண் 1, எப்போதும் வழக்குகள் நிறைந்தே காணப்படும். எனினும் இன்று பெருந்திரளான வழக்கறிஞர்களும், ஊழியர்களும் அங்கு குவிந்தனர். செல்லமேஸ்வரர், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு 11 வழக்குகளை இன்று விசாரித்தது.

மூத்த வழக்கறிஞர் ராஜீவ் டுட்டா, வழக்கறிஞர்கள் புஷான் மற்றும் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் நீதிபதி செல்லமேஸ்வரர் குறித்து பேசினர். அப்போது பேசிய வழக்கறிஞர் புஷான், ‘ஜனநாயகத்தை பாதுகாத்ததற்கு நன்றி’ என தெரிவித்தார்.

மேலும், ‘உங்கள் முன்னிலையில் நிற்பதே பெருமையாக கருதுகிறேன். நமது நாடு மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பில் உங்களுடைய பங்கினை இனி வரும் தலைமுறையினர் நினைவுகூர்வர்’என நெகிழ்ந்து பேசினார்.

பணி நிறைவு பெறும் நீதிபதி செல்லமேஸ்வரரை வழியனுப்பும் விதமாக பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியை நீதிபதி செல்லமேஸ்வரர் நிராகரித்தார்.

இதுகுறித்து கூறிய அவர், தனது சொந்த காரணங்களினாலேயே நிராகரிப்பதாகவும், இதற்கு முன்னரும் இதுபோன்ற பார்ட்டிகளில் பங்கேற்றதில்லை எனவும் தெரிவித்தபடி, பிரியாவிடை பெற்றார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top