கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக பாஜக போப்பையா நியமனம்- காங்கிரஸ் அதிருப்தி

 

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. போப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்

 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக தொகுதிகளைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.

 

இதற்கிடையே எடியூரப்பா பதவியேற்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

 

எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளையே பதவியேற்க வேண்டும். மூத்த எம்.எல்.ஏ ஒருவர் தற்காலிக சபாநாயகராக செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடக்காது என்பதையும் நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

 

நீதிமன்ற உத்தரவின்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக நாளை சட்டமன்றம் கூட உள்ளது. சபையை நடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. போப்பையாவை ஆளுநர் வஜுபாய் வாலா நியமித்துள்ளார். முன்னாள் சபாநாயகரான போப்பையா, விராஜ்பேட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

 

7 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்  தேஷ்பாண்டே இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்ட நிலையில் போப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, போப்பையா நியமனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

இதுபற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘பா.ஜ.க.வின் செயல் சரியல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் என்ன செய்ய உள்ளோம் என்பதை பிறகு தெரிவிக்கிறோம். பாராளுமன்ற மக்களவையில் கூட மூத்த உறுப்பினர்களுக்கே இடைக்கால சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top