மெஜாரிட்டி இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியை அபகரித்த பாஜக

 

தனிப்பெரும் கட்சியாக இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதாவின் வியூகம் கர்நாடக மாநிலத்தில் பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

தேசிய அளவில் காங்கிரசை வீழ்த்தி வருகிறது பா.ஜனதா கட்சி . மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி வருகிறது.

காங்கிரசுக்கு கர்நாடக மாநிலம் மட்டுமே பெரிய மாநிலமாக இருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. அந்த வகையில் முதலில் பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உடனடியாக ஆட்சி அமைக்க உரிமை கோராமல் 2 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறார்.

எதிர் முகாமில் இருந்து அதிருப்தியாளர்கள் தங்கள் பக்கம் வருவார்கள் அல்லது அவர்களை இழுக்கலாம் என்பதற்காக பா.ஜனதா அவகாசம் கேட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு முந்தைய தேர்தல்களில் பா.ஜனதா நடந்துகொண்ட விதமே இந்த சந்தேகத்துக்கு காரணம்.

1996 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் 161 எம்.பி.க்களை வைத்துக் கொண்டு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமர் ஆனார். 13 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

2008-ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 96 தொகுதிகளையும், பா.ஜனதா 78 தொகுதிகளையும் கைப்பற்றிய நிலையில் முதலிடம் பிடித்த காங்கிரசை ஆட்சி அமைக்க விடாமல் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா, பகுஜன் சமாஜ் மற்றும் 9 சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

2013-ல் டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 32 இடங்களில் வெற்றிபெற்றது. ஆம் ஆத்மி 28 இடங்களுடன் 2-வது இடத்தில் இருந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியில் அமர்ந்தது. 49 நாட்களில் அந்த ஆட்சி கவிழ்ந்தது.

2014-ல் மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 122 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. சிவசேனா ஆதரவை வற்புறுத்தி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைத்தது.

 

கடந்த ஆண்டு (2017) கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜனதா 13 இடங்களிலும் வெற்றிபெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக்காக காத்து இருந்தபோது திடீர் என்று 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா சிறிய கட்சிகள் ஆதரவை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.

 

இதேபோல் மணிப்பூர் மாநிலத்தில் 28 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்க 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது 21 எம்.எல்.ஏ.க்களுடன் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா சிறிய கட்சிகள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது.

கோவா, மணிப்பூரில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக முதலிடத்தில் இருந்தும் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா ஆட்சி அமைத்தது. இது காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு மேகாலயாவில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்த போதும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

19 இடங்களுடன் 2-வது இடத்தில் இருந்த தேசிய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜனதா சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க வழிவகுத்தது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சி அமையவிடாமல் பா.ஜனதா தடுத்துவிட்டது.

எனவே கர்நாடகத்திலும் பா.ஜனதா குறுக்கு வழியில் செல்லுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top