சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வாய்ப்பு தர வேண்டும் – கவர்னரை சந்தித்த பின் குமாரசாமி பேட்டி

 

 

கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

 

104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

 

இந்நிலையில், குமாரசாமி மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தற்போது கவர்னர் வாஜுபாய் வாலாவை சந்தித்தனர். அப்போது, ஆட்சியமைக்க தேவையான போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்தனர்.

 

இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி கூறியதாவது:-

 

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கவர்னரிடம் கூறினோம். இரு தரப்பையும் சந்திக்க அவருக்கு உரிமை உள்ளது. நிலையான அரசை அமைக்கும் எண்ணிக்கை எங்களிடம் உள்ளது. 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடித்தத்தை அவரிடம் வழங்கினோம்.

 

சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கவர்னர் கூறினார்.இவ்வாறு குமாரசாமி கூறினார்.

 

 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கவர்னர் மாளிகைக்கு அணிவகுத்து செல்ல முயன்றனர். ஆனால், அவர்கள் அனைவரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து, 10 பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

 

இதற்கிடையே, ஒருவேளை எடியூரப்பாவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதால் காங்கிரஸ் மைசூர் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top