பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாததைக் கண்டித்து சென்னை காவல் ஆணையருக்கு பத்திரிகையாளர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த மே 10-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராமதிலகம் தள்ளுபடி செய்தார். “இதே குற்றத்துக்காக சாதாரண பொதுமக்கள் மீது போலீஸார் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, அதே நடவடிக்கையை எஸ்.வி. சேகர் மீதும் எடுக்க வேண்டும். பாரபட்சம் காட்டக்கூடாது” என நீதிபதி உத்தரவிட்டார். இதனால் எஸ்.வி. சேகர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழலில், அவர் கடந்த 12-ம் தேதி பொது நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் வெளிப்படையாக பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாததைக் கண்டித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளர் ஆகியோருக்கு பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை சார்பில் வழக்கறிஞர் டி.அருண், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் கூட எஸ்.வி.சேகர் வெளிப்படையாக மத்திய அமைச்சருடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்றால், நீங்கள் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதற்கு சமம்.
இந்த நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் அவரை நீங்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றால், உங்கள் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பொதுமக்களே எஸ் வி சேகரை காணவில்லை என போஸ்டர் அடித்து போலீஸ்க்கு உதவியாக கடமையை ஆற்றுகின்றனர்.ஆனால் கடமையை செய்யவேண்டிய போலீஸ் எஸ் வி சேகரை இன்னும் கைது செய்யாமல் இருக்கிறது