தமிழக அரசே நினைவேந்தல் நிகழ்வு போராட்டம் அல்ல பண்பாட்டு நிகழ்வு தடை செய்யாதே; மே 17இயக்கம்

 

 

வரும் ஞாயிறு 20 மே அன்று நடைபெற இருக்கும் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பத்திரிக்கையாளர் அரங்கில் நடந்தது.மே பதினேழு இயக்கம் அதை ஒருங்கிணைத்து இருந்தது.

 

நினைவேந்தல் நிகழ்வென்பது அரசியல் பொதுக்கூட்டமோ போராட்டமோ அல்ல. இது தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வு.

 

இந்நிகழ்வுக்கு தமிழக அரசோ காவல்துறையோ இடையூறு ஏற்படுத்துவது முன்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிரானது. அவ்வாறு இடையூறு செய்தால் அது தமிழீழ விடயத்தில் அவர்களின் நிலைப்பாடு மக்கள் முன் அம்பலப்படும் சூழல் தான் உருவாகும்.

 

தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டிய இந்நிகழ்வை மக்கள் நடத்துவதற்கு ஒத்துழைப்பாவது அவர்கள் வழங்க வேண்டும்.மே பதினேழு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இவ்வாறு கூறினார்.

மே பதினேழு இயக்க அறிக்கையில்…

 

2009இல் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை மே பதினேழு இயக்கம் கடந்த எட்டு வருடங்களாக சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தி வருகிறது. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட நினைவேந்தலை தமிழக அரசு தனது அரசு நிகழ்வாக அறிவித்து நடத்த வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது.  இதை அரசுக்கு வலியுறுத்தவே மெரினாவில் மே பதினேழு இயக்கம் ஆண்டுதோறும் நினைவேந்தலை எளிய மக்களோடு சேர்ந்து கடந்த எட்டு வருடமாக எந்தவித பிரச்சனையுமின்றி நடத்தி வருகிறது.

 

மேலும் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது என்பது தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வு. அது தமிழர்களின் அடிப்படை உரிமையும் ஆகும். மேலும் உலகமெங்கும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவது அடிப்படை உரிமை என்று ஐநா அவையில் சட்டம் இருக்கிறது. பிறப்பு, இறப்பு ஆகிய நிகழ்வுக்கான மரியாதை செலுத்துவதென்பது காலங்காலமாக அனைத்து இனக்குழுக்களும் கடைபிடிக்கும் ஒரு நடைமுறை என்று உலக அரசியல் சாசனங்களும் உறுதி செய்கின்றன. எனவே தமிழர்களின் பண்பாட்டு உரிமையான நினைவேந்தல் நிகழ்வினை நசுக்கும் எந்த நடவடிக்கையிலும் அரசு ஈடுபடாமல் ஓத்துழைப்பு நல்கிட வேண்டும். அதுவே தாங்கள் சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்திற்கு நேர்மையாக இருக்கின்ற செயலாக இருக்கும்.

 

எனவே ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது ஞாயிறு அன்று எப்படி இந்த பண்பாட்டு நிகழ்வினை நடத்தி வருகிறோமோ அதேபோல இந்த வருடமும் 20.05.2018 அன்று அஞ்சலி செலுத்த மே 17 இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதில் பல்வேறு ஜனநாயக சக்திகளின் தலைவர் கலந்து கொள்ளவுள்ளார்கள். என கூறி இருந்தது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்  எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் தேகலான் பாகவி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து அத்திரிதாஸ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி, தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக்கழகத்திலிருந்து தவசி, தந்தைப்பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து குமரன், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் டைசன் மற்றும் பல்வேறு இயக்கங்கள் கலந்துகொண்டன.

 

 

 

 

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top