மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

 

 

 

தமிழக – கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் நீர்ப் பாசனத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் வரும் நீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 5-ந் தேதி 454 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 674 கன அடியாக அதிகரித்தது. நேற்று 514 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 1449 கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.

நேற்று காலை 34.61 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 34.77 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நீர் திறப்பைவிட நீர்வரத்து 3 மடங்கு அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மேட்டூர்அணையில் கோடை காலத்தில் நீர்மட்டம் கூடுதலாக இருப்பதால் குடி நீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறினார்கள்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top