கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை ‘தொல்காப்பியர் பற்றிய ஆய்வு’ அரங்கேற்றம்

 

 

கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படை என்கிற பெயரில் வெளியிடும்   கட்டுரைகள் தொகுப்பில் நேற்று  தொல்காப்பியர் பற்றிய ஆய்வு அரங்கேற்றத்தில் தமிழகத்துக்கு காவிரி மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படும் வாய்ப்பு வரலாம் என்றார்

 

தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், மறைமலையடிகள், உ.வே.சாமிநாதய்யர், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், கருணாநிதி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரை பற்றிய கட்டுரைகளை கவிஞர் வைரமுத்து அரங்கேற்றியுள்ளார்.

 

அதில் ஆண்டாளைப் பற்றி கவிஞர் வைரமுத்து அரங்கேற்றிய கட்டுரை தொகுப்பை சரியாக புரியாமல் அல்லது வேண்டுமென்றே அரசியலாக்க நினைத்த பாஜக வைச் சேர்ந்த எச் ராஜா மக்களிடையே ஒரு சலசலப்பை உருவாக்கினார்.தமிழகத்தின் மிக முக்கியமான ஆளுமை கவிஞர் வைரமுத்து என்பதை மறந்து, தரங்கெட்ட முறையில் அரசியாலாக்கிய எச் ராஜாவுக்கு இந்த்துத்துவ முகம் கொண்டவர்கள் ஆதரித்து பேசினார்கள்.குறிப்பாக ஸ்ரீரங்கம் ஜீயர் அவர்கள்.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை வரிசையில் 16-வது கட்டுரையான தொல்காப்பியர் பற்றிய ஆய்வு கட்டுரையை அரங்கேற்றும் விழா சென்னை அடையாறு ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

 

விழாவிற்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் தலைமை தாங்கினார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னதாக தொல்காப்பியர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

 

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

தொல்காப்பியம் கட்டிக்கொடுத்த கட்டுமானத்தின்மீது தான் மூவாயிரம் ஆண்டு நீண்ட தமிழ் நின்று நிலைகொண்டிருக்கிறது. எத்தனையோ அரசு அதிகாரங்களும், ஆட்சி அதிகாரங்களும் தோன்றித்தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால் தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களும் இன்று வரை அழியாமல் தமிழை ஆண்டு கொண்டிருக்கின்றன.

68 ஆண்டு கொண்ட இந்திய அரசமைப்பு கூட 101 முறை திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று கணிக்கப்படுகிற தொல்காப்பியம் திருத்தம் தேவையில்லாத திறம் கொண்டிருக்கிறது. வடமொழியும், வடநாட்டார் பண்பாடும் தமிழர் மீது வல்லாதிக்கம் செலுத்த தலைப்பட்ட காலத்தில் தமிழின் மொழி மரபையும் தமிழர்களின் பண்பாட்டு மரபையும் நீர்த்துப்போகாமல் காத்து வைத்த பெருமை தொல்காப்பியத்துக்கு உண்டு.

தொல்காப்பியம் ஓர் அறிவுக்களஞ்சியம். உயிர், உயிர்மெய், சார்பெழுத்துக்கள் சேர்த்து தமிழின் மொத்த எழுத்துக்கள் 33 தான், தமிழ்நாட்டுக்கு எல்லை தெற்கே குமரிமுனை; வடக்கே வேங்கடமலை, வடசொற்களில் வட எழுத்துக்களை களைந்து தமிழுக்குள் புழங்கலாம், நாடுகாக்க மாண்ட வீரனுக்கு நாட்டப்பட்ட நடுகல் மரபில் இருந்து தான் தமிழர்களின் தெய்வவழிபாடு பிறந்தது.

இப்படி ஆயிரம் செய்திகள் தொல்காப்பியத்தில் செறிந்து கிடக்கின்றன. இன்றைய காவிரி பிரச்சினைக்கும், தொல்காப்பியத்துக்கும் கூட தொடர்பு இருக்கிறது. இந்த மண்ணுக்கென்று காலங்காலமாக உரிமைப்பட்ட காவிரி ஆறு இன்று மறுக்கப்படுகிறது. 1924-ல் 575 டி.எம்.சி. தண்ணீர் காவிரியில் வழங்கப்பட்டது. 1984-ல் 361 டி.எம்.சி. ஆகவும், 1991-ல் 205 டி.எம்.சி. ஆகவும், 2007-ல் 192 டி.எம்.சி. ஆகவும் குறைக்கப்பட்டது.

2018 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த நூறாண்டுகளில் காவிரிநீர் மூன்றில் ஒருபங்காய் சுருங்கிவிட்டது. தமிழ்நாட்டில் பாலைவனம் என்று தனி நிலம் கிடையாது. முல்லையும், குறிஞ்சியும் நீர்வளம் இழக்கும்போது பாலை நிலமாய் திரிகின்றன.

இப்போது காவிரி மறுக்கப்பட்டால் தஞ்சை மண்டலமாகிய மருதநிலமும் தன்னிலை திரிந்து பாலைவனமாகி விடும். இதைத்தான் ‘மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்’ என்கிறார் தொல்காப்பியர். இந்திய இறையாண்மை இதை ஏற்றுக்கொள்கிறதா? தண்ணீர்தான் கேட்டோம்; எங்கள் நிலத்தை பாலைவனமாக்கி எங்கள் வாயில் பாலை ஊற்றுவதா?

பட்டினப்பாலையும், சிலப்பதிகாரமும் தமிழ்நாட்டுக்கு எழுதிவைத்த உயில் தான் காவிரி. அது மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படும் வாய்ப்பு வரலாம். எங்கள் இலக்கியங்கள் எல்லாம் புலமையின் பொழுதுபோக்குகள் அல்ல. அறுந்துபோகாத வரலாற்றுச் சங்கிலிகள்; உடைக்க முடியாத உரிமை சாசனங்கள்.

பண்டிதர் கூடங்களிலும், மடங்களின் மாடங்களிலும் மட்டுமே அறியப்பட்ட தொல்காப்பியத்தை கடைசித்தமிழனின் கைபேசிக்குள் வாசிக்க தர வேண்டும் என்பதே என் விஞ்ஞான விருப்பம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா, மரபின் மைந்தன் முத்தையா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சந்திரசேகர், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா, முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், எழுத்தாளர் சிலம்பொலி செல்லப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top