பார்சிலோனா 25-வது முறையாக லா லிகா சாம்பியனானது; மெஸ்சி ஹாட்ரிக் கோல்

 

பார்சிலோனா அணி லா லிகா கால்பந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2017-18 சீசனில் அந்த அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வீறுநடை போட்டு சென்றுக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய லா லிகா டைட்டிலை வெல்ல போதுமான புள்ளிகள் இருந்த போதிலும், அதிகாரப்பூர்வமாக கைப்பற்ற ஒரு வெற்றி தேவையிருந்தது.

இந்நிலையில்தான் பார்சிலோனா டெபோர்டிவோ அணியை நேற்று நள்ளிரவு எதிர்கொண்டது. ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் டெம்பெலே கொடுத்த பந்தை பிலிப்பே கவுட்டினோ கோலாக மாற்றினார். பின்னர் 37-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் டெபோர்டிவோ அணியின் லூகாஸ் பெரேஸ் ஒரு கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், 63-வது நிமிடத்தில் டிபோர்டிவோ அணியின் எம்ரே கோலக் கோல் அடிக்க ஸ்கோர் சமநிலைப் பெற்றது. அதன்பின் 81 மற்றும் 84-வது நிமிடத்தில் சுவாரஸ் கொடுத்த பந்தை மெஸ்சி அடுத்தடுத்து கோலாக மாற்றினார். மெஸ்சியின் ஹாட்ரிக் கோலால் பார்சிலோனா 4-2 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் 34 போட்டிகளில் 86 புள்ளிகள் பெற்றி பார்சிலோனா சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. இதன்மூலம் 25-வது முறை லா லிகா டைட்டிலை வென்றுள்ளது.

2-வது இடத்தில் இருக்கும் அட்லெடிகோ டி மாட்ரிட் 35 போட்டியில் 75 புள்ளிகள் பெற்றுள்ளது. ரியல் மாட்ரிட் 34 போட்டியில் 71 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிக்கு இன்னும் தாலா நான்கு போட்டிகள் உள்ளது. பார்சிலோனா நான்கில் தோற்று, ரியல் மாட்ரிட் நான்கில் வெற்றி பெற்றாலும் பார்சிலோனா 86 புள்ளிகளுடன், முதல் இடத்தில்தான் இருக்கும். ரியல் மாட்ரிட் 83 புள்ளிகள்தான் பெற்றிருக்கும்.

அட்லெடிகோ டி மாட்ரிட் மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 84 புள்ளிகள் பெறும். இதனால் பார்சிலோனாவின் டைட்டில் உறுதியாகியுள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top