தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி பங்கேற்பு

 

 

தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

 

அ.குமரெட்டியபுரத்தில் நேற்று 77-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தினர். இதேபோன்று பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மீளவிட்டான், மடத்தூர், தெற்குவீரபாண்டியபுரம், சில்வர்புரம், சிலோன்காலனி, தபால் தந்தி காலனி, பாத்திமாநகர், பனிமயமாதா ஆலயம் அருகே உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

 

இந்த நிலையில் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகே நேற்று 15-வது நாளாக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி நேரில் வந்து போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, 23 ஆண்டுகளாக இந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பலர் இறந்து உள்ளனர். ஆனால் ஆஸ்பத்திரிகளில் அந்த இறப்பு இயற்கையானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்தவில்லை என்றால் நமது அடுத்த தலைமுறையினர் குறைபாடுடன் பிறக்கும் நிலை ஏற்படும். எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை இங்கு இருந்து துரத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை போராடுவோம் என்று கூறினார்.

 

தொடர்ந்து இனிகோ நகரை சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள், பெண்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக பனிமயமாதா ஆலயம் அருகே போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்தனர். அவர்களை சமுத்திரக்கனி வரவேற்றார். அவர்களுடன் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top