வன ஊழியர்கள் கொடுமை; ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்

கேரள மாநிலம் சாலக்குடி பெருங்காடித்து காடார் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் சசி. இவர் தனது மனைவி மற்றும் 1½ வயது மகளுடன் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு மாயமானார். அதே சமயத்தில் இவரது குடும்பத்தை தவிர மற்ற 4 குடும்பங்களும் திடீரென மாயமானார்கள்.
 
5 ஆதிவாசி குடும்பங்கள் மாயமான தகவல் சமூக அமைப்பாளர் பைஜூவாசுதேவன், சாலக்குடி ஆதிவாசி பெண் கீதா, மற்றும் கேரள அரசு சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கீதாலட்சுமி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் 5 குடும்பங்களை வனப்பகுதியில் தேடினர்.
 
நேற்று முன்தினம் பரம்பிக்குளம் அருகே உள்ள கொடிய மிருகங்கள் நடமாடும் வனப்பகுதிக்குள் சென்றனர். ஆதிவாசிகள் வசித்த காடார் காலனியில் இருந்து 12 கி.மீட்டர் தூரமுள்ள ஒரு பாறை இடுக்கில் சசி குடும்பத்துடன் வசித்து வந்தார். மாயமான சசி மற்றும் அவரது குடும்பத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
 
கடந்த 1 வருடமாக ஏன் தலைமறைவாக இருந்தீர்கள் என்று கேட்டபோது, வன ஊழியர்கள் சந்தன கட்டை கடத்தியதாக எங்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து கொடுமைபடுத்தினர். வன ஊழியர்களின் கொடுமைக்கு பயந்து நாங்கள் பாறை இடுக்கு மற்றும் மரபொந்துகளில் வசித்து வந்தோம் என்றனர்.
 
மேலும் உணவுக்கு இங்கு கிடைக்கும் பச்சை காய்கறிகள், மற்றும் இலை, தழைகளை தின்று வந்தோம். எப்போதாவது வன ஊழியர்கள் கண்ணில் படாமல் வெளியே சென்று கடையில் மளிகை பொருட்கள் வாங்கி வருவோம் என்றார். மேலும் மாயமான 4 குடும்பங்கள் எங்கு உள்ளனர் என்று தனக்கு தெரியாது என்று கூறினார். ஆதிவாசி சசியின் மனைவி காசநோயால் அவதிப்பட்டு வந்தார்.
 
அவர்களை மீட்ட சமூக ஆர்வலர்கள் சாலக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் மாயமான ஆதிவாசி 4 குடும்பங்களை தேடி வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆதிவாசிகளை கொடுமைப்படுத்திய வன ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top