சினிமாக்காரர்களே கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்! போராட்டத்தை இளைஞர்களிடம் விட்டு விடுங்கள்!!

 

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்துவந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்க இருந்தது.

 

தமிழகம் காவிரி விவகாரத்தில் கொதிநிலையில் இருந்தபோது இதுமாதிரியான கார்பரேட் சூதாட்ட விளையாட்டு இளைஞர்களை போரட்டக்களத்திலிருந்து திசை மாற்றும் என தலைவர்கள் நினைத்தார்கள். முதலில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அன்று விளையாட்டை பார்க்க தவிருங்கள் ஒருநாள் விளையாட்டு மைதானம் காலியாக கிடக்கட்டும் உலகமே நம் பிரச்சனை நோக்கி திரும்பி பார்க்கும் என அறிக்கைவிட்டார்.பிறகு தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக வேல்முருகன்,குளத்தூர் மணி ,கோவை ராமகிருஷ்ணன்,திருமுருகன்,தெகலான்பாகவி போன்றோர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து ஐபிஎல் போட்டி அன்று முற்றுகை நடத்துவோம் அதே தினத்தில் நெய்வேலி அனல்மின் நிலையத்தை வேல்முருகன் தலைமையில் முற்றுகை நடைபெறும் என அறிக்கை வெளியிட்டனர்.

ஐபிஎல் சூடு பிடிக்க தொடங்கியதும் பாரதிராஜாவும் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என ஒரு அமைப்பை உருவாக்கி திரை உலகத்தினர் அனைவரும் ஒன்றுகூடி ஐபிஎல் முற்றுகை அறிவித்தார்கள்.இதற்கிடையில் விமானநிலையம் முற்றுகை செய்வோம் என்று சொல்லிவந்த சீமானும் மணியரசனும் ஐபிஎல் சூடு பிடித்ததும் முந்தியநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து நாங்களும் ஐபிஎல் முற்றுகை யிடுவோம் என்றனர்.

 

10-ம் தேதி போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டம் சிறப்பாக  நடைபெற்றது, ஆனால், அதே தினத்தில் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கெடுத்த வேல்முருகன் தலைமையில் நடந்த நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகை இருட்டடிப்பு செய்யப்பட்டது. சினிமாக்காரர்கள் பங்கெடுத்த ஐபிஎல் போராட்டம் பத்திரிகையாளர்களால் கவனத்திற்குள்ளாகியது.

 

போராட்டத்தின்போது போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் சிலர் போலீஸார் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இயக்குனர் களஞ்சியம் மற்றும் அவரது தோழர்களும் தாக்கப்பட்டனர்,இயக்குனர் வெற்றிமாறன் தாக்கப்பட்டார்,திருப்பி போலீசைதாக்கியது நாம்தமிழர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றார்கள்.மைதானத்திற்கு உள்ளே கருப்புக்கொடி காட்டியதற்கு நாம்தமிழர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர் சீமானும் தம் தம்பிகளின் பணியை மெச்சி அறிக்கை விட்டார்.எல்லோராலும் வடிவமைக்கப்பட்ட போராட்டம் நாம்தமிழர் அமைப்பின் போரட்டம்போல் பேசப்பட்டது. போலீசைதாக்கியதை மனதில் வைத்துக்கொண்டு கருப்புக்கொடி ஆர்பாட்டத்தின் போது காவல்துறை சீமானை கைது செய்ய முயற்சி பண்ணியது.பாரதிராஜா மணியரசன் தற்போதைய எம்எல்.ஏ தமிம் அன்சாரி  போன்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இப்போது கைது செய்யக்கூடாது பிறகு முறைப்படி அவருக்கு வாரன்ட் அனுப்பி கைது செய்துகொள்ளுங்கள் என்று முடிவு செய்யப்பட்டது.அன்று சீமான் உள்பட  எல்லோரும் விடுவிக்கப்பட்டார்கள் ஆனால், சீமானை கைது செய்யக்கூடாது என்று மண்டபத்திற்கு வெளியே போராடிய நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் மஜாக கட்சியை [தமிம் அன்சாரி கட்சி ]சேர்ந்தவர்களும் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களுடைய ஜாமீன் மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

 

இந்நிலையில்,  சீமானை கைது செய்யாமல் இருக்க பாரதிராஜா தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் கைது தடுப்பு நடவடிக்கையாக காவல்துறை ஆணையாளரை சந்திப்பது,கர்நாடகாவில் இருந்து வந்து இங்கு நடித்து பெயர் பெற்று இப்போது கட்சி ஆரம்பித்து முதல்வராக துடிக்கும் ரஜினிகாந்த் படத்தை எதிர்ப்பது என முக்கிய முடிவு எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்று பாரதிராஜா ,வெற்றிமாறன் மற்றும் பலரும் காவல்துறை ஆணையாளர்  அலுவலகத்திற்கு வந்தனர்

 

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றி மாறன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தின்போது நிகழ்ந்த ஒரு சில அசம்பாவிதங்களுக்கு காவல் ஆணையரை நேரில் சந்தித்து இயக்குநர் பாரதிராஜா வருத்தம் தெரிவித்தார் .இதற்கிடையில் சீமான் காவல்துறையினரை தாக்கியது என் தம்பிகள் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு விட்டார்

பின்னர் வெளியே வந்த பாரதிராஜா கூறும்போது, “கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக நடைபெற்ற பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கவும் நடந்த ஒரு சில அசம்பாவிதங்களுக்கு வருத்தம் தெரிவிக்கவும் வந்தோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் காவல் ஆணையரிடம் தெரிவித்தோம். உலகம் முழுக்க பார்க்கும் ஐபிஎல் போட்டியை கவனத்தை ஈர்க்கவே எதிர்ப்பு தெரிவித்தோம்” என்றார்.

 

காவிரி விசயத்தில் இவர்களின்-சினிமாக்காரர்களின் நிலைப்பாடு இவ்வளவுதான்.பரபரப்புக்கு ஏதாவது செய்வது பிறகு மன்னிப்பு கேட்பது என்று இருந்தால் மக்கள் எப்படி இவர்களை நம்புவார்கள்.மக்களை அரசியல் படுத்தத்தான் போராட்டம் என்பது ஆனால் இவர்களோ வெறும் பரபரப்புக்கும் செய்திகளுக்கும் அரசியல் பண்ணுவது போராடும் மக்களிடம் அரசியல் நீக்கம் செய்வதற்கு சமம்.

 

சினிமாக்கரர்களே தயவு செய்து போராட்டக்களத்திற்கு நீங்கள் வரவேண்டாம். அறிக்கை மட்டும் தாருங்கள் போதும்! எங்கள் இளைஞர்கள் போராட்டத்தின் மூலம் சாதித்து காண்பிப்பார்கள்.உங்களை நன்கு அறிந்ததால்தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உள்ளே விடாமல் இருந்தார்கள்.வெற்றியும் பெற்றார்கள்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top