மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதம்; கைவிடும்படி போலீஸ் அச்சுறுத்தல்

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட சிறுமி  ஆசிபாவின் கொடூர மரணம்,உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் டெல்லி ராஜ்காட்டில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். அவரது போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் ஸ்வாதி தனது போராட்டத்தை தொடர்கிறார்.

ஆனால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி காவல்துறையும் டாக்டர்களும் கட்டாயப்படுத்துவதாக ஸ்வாதி மாலிக் இன்று குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு பாதுகாப்பு கேட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அடுத்தடுத்து பதிவிட்டுள்ள ஸ்வாதி மாலிவால், ‘அரவிந்த் கெஜ்ரிவால் சார், என்னை கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர் மற்றும் டாக்டர் ஆகியோர் தொந்தரவு செய்கின்றனர். நீங்கள் என்னை பாராட்டலாம். ஆனால் ஒட்டுமொத்த போலீஸ் படையும் ராஜ்காட்டில் இருந்து என்னை வெளியேற்ற முயற்சி செய்கிறது.

அவர்களிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுங்கள். எனது உடல்நிலை குறித்து அவ்வப்போது பரிசோதனை செய்வதற்கு முறையான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும். எனது உண்ணாவிரதத்தை நிறுத்தும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவுகள் வந்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். தயவு செய்து எனக்கு உதவுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து உண்ணாவிரதம் இருக்கும் ஸ்வாதி மாலிவாலை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என டெல்லி ஆளுநர் அனில் பைஜால் மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் உத்தரவிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top