காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வைகோ மைத்துனர் மகன் தீக்குளிப்பு

 

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

 

இந்த நிலையில், விருதுநகரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சரவணன் சுரேஷ்(வயது 50) என்ற நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீக்குளித்ததில் 80 சதவீத காயம் அடைந்த சரவணன் சுரேஷ், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விருதுநகரில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் என்பது தெரியவந்தது

 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் (50). இவர் விருதுநகர் ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர்.

 

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த சரவண சுரேஷ், திடீரென கீழே இறங்கி உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். இதையடுத்து, 80  சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட சரவண சுரேஷை அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சரவண சுரேஷ் தீக்குளித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரவண சுரேஷ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

காவிரிக்காக என் மருமகன் சுரேஷ் தீக்குளித்து விட்டான். உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போல எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும்? என்று வைகோ வேதனை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
 

என்னுடைய துணைவியார் ரேணுகாதேவி அவர்களின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜம் அவர்களின் மகன் சரவண சுரேஷ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றுகின்றவன். தேர்தல் காலங்களில் எல்லாம் என்னுடனேயே இருப்பான். பட்டதாரியான அவன் மிக அமைதியானவன். அனைவரையும் அன்போடு நேசிக்கும் உயர்ந்த பண்பாளன். என் துணைவியாரின் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளிலேயே நான் மிக மிக நேசித்தது சரவண சுரேஷைதான்.

 

சரவண சுரேசின் திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். அவனது மூத்த மகன் ஜெயசூர்யா மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் எட்டாம் வகுப்பு படிக்கிறாள். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் வந்து எனது உறவினன் என்று காட்டிக்கொள்ளாமலும், முன்னிலைப்படுத்திக் கொள்ளாமலும் கட்சி நலனையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தான்.

 

 

கடந்த சில நாட்களாக நான் நியூட்ரினோ நடைப்பயணம் மேற்கொண்டபோதும், அங்கும் வந்தான். பிரதமர் மோடி வருகையை எதிர்த்து நேற்று நான் ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மிகவும் மனம் உடைந்து கவலையாகவே இருந்திருக்கிறான். ஆசிரியையாகப் பணியாற்றும் அவனது துணைவியார் அமுதா, “ஏன் கவலையாகவே இருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “மாமா பேச்சைக் கேட்டு மனசே சரியில்லை” என்று சொல்லி உள்ளான். இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை அருகே உடல் எங்கும் மண்ணெண்ணய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டான். உடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனை தற்பொழுது மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிறார்கள். உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போல எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும்?

 

நேற்று இரவு திமுக செயல் தலைவர் சகோதரர் ஸ்டாலின் பங்கேற்ற கடலூர் பொதுக்கூட்டத்தில், “இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தேன். இன்று என் குடும்பத்துப் பிள்ளையே காவிரிக்காக தீக்குளித்தான் எனும்போது, என்னை நான் தேற்றிக்கொண்டாலும், சரவண சுரேசின் பெற்றோருக்கும், என் துணைவியாருக்கும் உறவினர்களுக்கும் எப்படி தேறுதல் கூற முடியும்? என் பொதுவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் செல்போனில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது. நொறுங்கிப்போன இதயத்தோடு யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று மீண்டும் கரம்கூப்பி வேண்டுகிறேன்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top