மெரினாவில் தொடர் போரட்டம் நடத்த விவசாயி அய்யாகண்ணு உயர்நீதிமன்றத்தில் மனு

 

 

விவசாய சங்கத்தின் நிர்வாகி அய்யாகண்ணு சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது.

 

ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினாவில் பெரிய அளவில் நடந்தது. அதுபோல, காவிரி விவகார போராட்டமும் அங்கு நடந்து விடக்கூடாது என்பதற்காக மெரினா கடற்கரைக்குள் பொதுமக்கள் நுழைய தடை விதித்து போலீசார் தடுப்புக்களை அமைத்துள்ளனர். டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற மாநகரங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு என்றே தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல, சென்னையில் இடம் இல்லை. சுதந்திர போராட்ட காலத்தில் இருந்தே சென்னை மெரினா கடற்கரையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணா விரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீஸ் கமி‌ஷனரிடம் மனு கொடுத்தேன். இதுவரை பதில் இல்லை. எனவே, மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணா விரதம் போராட்டம் நடத்த அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘மெரினா கடற்கரை என்பது பொதுமக்கள் வந்து செல்லும் பொது இடம். அங்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த 90 நாட்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது’ என்று கருத்து தெரிவித்தார்.

அதற்கு மனுதாரர் வக்கீல் ஸ்ரீதர், ‘90 நாட்கள் என்பதை வேண்டுமென்றால் குறைத்துக் கொள்கிறோம்’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘எத்தனை நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறார்? என்பதை அய்யாகண்ணுவிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும்’ என்று கூறி விசாரணையை நாளை (வெள்ளிக்கிழமைக்கு) தள்ளிவைத்தார்.

பின்னர், ‘டெல்லியில் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகள் பலர் பலவிதமான போராட்டங்களை நடத்தினார்கள். அரை நிர்வாணப் போராட்டம் எல்லாம் நடத்தினார்கள். அரை நிர்வாணப் போராட்டங்களில் எல்லாம் ஈடுபட வேண்டாம் என்று அய்யாகண்ணுவுக்கும், அவரது சங்க விவசாயிகளுக்கும் அறிவுரை வழங்குங்கள்’ என்று வக்கீலிடம் நீதிபதி ராஜா கருத்து தெரிவித்தார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top