நிதி கமிஷனின் விதிமுறையை மத்திய அரசு மாற்றி அமைக்கவேண்டும்:கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்

 

15-வது நிதி கமிஷனின் விதிமுறையை மத்திய அரசு மாற்றி அமைக்கவேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தினார்.

 

15-வது மத்திய நிதி கமிஷன் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் விதிமுறையை வகுத்துள்ளது.

 

இதனால் தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தென் மாநில நிதி மந்திரிகள் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநில நிதி மந்திரிகள் பங்கேற்றனர்.

 

இந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

 

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்கனவே மாநிலங்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்கள் தங்களது நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான உரிமைகள் மேலும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

 

இதுபோன்ற நிலையில், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் புள்ளி விவரங்களின் அடிப்படையில், மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து அளிக்கப்படும் என மத்திய நிதி கமிஷன் விதிமுறை வகுத்திருப்பது, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு பெரிய அளவில் இழப்பைத் தரும்.

 

எனவே 1971-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நிதியை பகிர்ந்து அளிக்கவேண்டும். மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்தும், சுகாதாரத்தை பேணியும் வரும் மாநிலங்களுக்கு நிதி ஆதாரம் எந்த வகையிலும் மறுக்கப்படக் கூடாது. மேலும் இந்த புதிய விதிமுறை கூட்டாட்சி தத்துவ முறைக்கு முரணாக அமைந்து உள்ளது.

 

மக்கள் தொகையை கட்டுப்படுத்துதல் மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் சாதனை இலக்கை அடைவதற்காக கல்வி, சுகாதாரம், குடும்ப நலத்திட்டங்களில் மாநிலங்கள் அதிக முதலீடு செய்கின்றன. சுகாதாரம் மேம்பாடு அடைந்திருப்பதால் முதியோர்கள் அதிகரிக்கும் நிலையும் ஏற்படுகிறது. அவர்களின் நலத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு உள்ளன.

 

எனவே 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பது சரியல்ல. நிதி கமிஷனின் இந்த விதிமுறையை மத்திய அரசு மாற்றி அமைக்கவேண்டும்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

கேரள நிதி மந்திரி டி.எம்.தாமஸ் ஐசக் பேசும்போது, “2011-ம் மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கினால் தென் மாநிலங்கள் மத்திய அரசின் நிதி உதவியில் பெரும் பங்கை இழக்க நேரிடும். இதில் கேரளாவுக்கு மட்டுமே ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை மத்திய நிதி ஒதுக்கீடு குறையும். தென்மாநிலங்கள் சிறப்பான முறையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கும் நிலையில் இந்த காரணத்துக்காக நிதியை குறைப்பதை ஏற்க முடியாது” என்றார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top