நீண்டகாலமாக சிறையில் வாடும் எஸ்சி, எஸ்டி பிரிவு விசாரணைக் கைதிகள்

 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன், கட்சியின் 16 எம்எல்ஏக்களுடன் கடந்த வாரம் குடியரசுத் தலைவரை சந்தித்தார். அப்போது அவர், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மீதான உச்ச நீதிமன்ற உத்தரவால், ஜார்க்கண்ட் பழங்குடியினரின் நிலச்சீர்திருத்த சட்டமும் பாதிப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

 

எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த விசாரணைக் கைதிகளுக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், அவர்கள் நீண்டகாலமாக சிறைகளில் வாடுவதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் புகார் அளித்துள்ளார்

 

மேலும் நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கைதிகளுக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவை யில் இருப்பதாகவும், இதனால் அவர்கள் பல வருடங்களாக சிறையில் வாடி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

 

இந்த புகாரில், “ஜார்க்கண்டின் சாய்பஸா சிறையில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண் மற்றும் ஒரு ஆண் மீதான வழக்கு 2006 முதல் விசாரிக்கப்படாமல் உள்ளது. இதேபோல, எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கைதிகள் மாநிலத்தின் வேறு பல சிறைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்குகள் கடந்த 10 வருடங்களாக ஒருமுறை கூட விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

 

நாட்டில் உள்ள பெரும்பாலான சிறைகளிலும் இதே நிலை இருப்பதாகவும் ஹேமந்த் சோரன் புகார் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் தேசிய குற்றப்பதிவு மையத்தின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி உள்ளார். அதன்படி, 2015-ல் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் விசாரணைக் கைதிகள் மட்டும் 67.2 சதவீதம் ஆகும். இவர்களில் சிறுபான்மையினர் 30.2%, எஸ்சி 21.6% மற்றும் எஸ்டி 12% ஆகும். இப்பிரிவினரில் ஜார்க்கண்டில் மட்டும் 196 கைதிகள் விசாரிக்கப்படாமல் சிறைகளில் வாடுகின்றனர்.

 

இதுகுறித்து ஜார்க்கண்ட் தும்கா தொகுதி எம்எல்ஏ ஹேமந்த் சோரன் ‘கூறும்போது, “நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது சிறைகளில் விசாரணைக் கைதிகள் 25 சதவிதம் இருந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்களுக்காக வாதாட வழக்கறிஞர்களை நியமிக்க வசதி இல்லாத காரணத்தாலேயே எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக விசாரணைக் கைதிகளாக உள்ளனர் என குடியரசுத் தலைவரிடம் கூறினோம். இதைக் கனிவுடன் கேட்ட அவர், அனைத்து மாநில சிறைகளிலும் உள்ள விசாரணைக் கைதிகள் பற்றிய புள்ளிவிவரங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறார். மீண்டும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து புள்ளி விவரங்களை வழங்குவோம்” என்றார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top