100 சதவிகிதம் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர், மனித நேய மக்கள் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் மட்டுமின்றி ரெயில்களை மறித்தும் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

 

அவ்வகையில்  சென்னை காமராஜர்  சாலையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், கி.வீரமணி, திருமாவளவன், ஜவாகிருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.   மறியலில் ஈடுபட்டு கைதான, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.  திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் மண்டபத்தில் தங்கவைக்கபட்டு உள்ளனர்.

மண்டபத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது.  மத்திய அரசு மற்றும் துணை நிற்கும் தமிழக அரசை கண்டித்து திமுக போராடி வருகிறது. தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது. இன்று மாலை நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம், நாளை காலை 10.30க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்குபெறும் காவிரி உரிமை மீட்பு பயணம் 7 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது . தமிழக ஆளுநருக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை; அதனால் அவர் தனியே ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார்.

 

“ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு தொடர்ந்த மனுவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.தற்போதைய ஆட்சி மீது ஆளுநர் எந்த அளவுக்கு அபிப்ராயம் வைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே என கூறினார்.

 

புதுச்சேரியில் தமிழக மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் பெரும்பாலானவை இயக்கப்படவில்லை. போராட்டங்களில் 7 தமிழக அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டன. ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.

 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

 

காவிரி மேலாண்மை வாரியம் கோரி திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் சற்று சிரமம் அடைந்துள்ளனர்.

 

கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் கேரள அரசுப் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

 

திருப்பதி, சித்தூரில் இருந்து தமிழகத்திற்கு வழக்கம்போல் ஆந்திர அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

திருச்சியில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மூலம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

கோவையில் 90%, திண்டுக்கல்லில் 75%, கிருஷ்ணகிரியில் 90% அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

விருதுநகர் மாவட்டத்தில் 85% பேருந்துகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 100% பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 80% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

முழு கடையடைப்பு, ஆட்டோ சங்கங்கள் வேலை நிறுத்தம், ஆகிய போராட்டங்களும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அரசுப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் பெரிதாக பாதிப்பு இல்லை. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top