எஸ்சி, எஸ்டி சட்டம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் கலவரம்; 9 பேர் பலி

தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த 20-ந் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது
 

இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நேற்று நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் வடமாநிலங்களில் பெரும் கலவரம் வெடித்து. இதையொட்டி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்துக்கு அதிரடிப் படை அனுப்பப்பட்டுள்ளது.

 

.மத்திய பிரதேச மாநிலத்தின் மோரினா, குவாலியர், பிண்ட் பகுதிகளில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

 

மொரேனா நகரில் மாணவர் அமைப்பின் தலைவர் ராகுல் பதக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது.

 

ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். அந்த மாநில தலைநகர் ஜெய்ப்பூர் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

 

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பஞ்சாப், ஹரியாணா வின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் சண்டிகர், ஜலந்தர், பத்தின்டா, அமிர்தசரஸ், பெரோஸ் பூர் பகுதிகளில் போலிஸ்  வன்முறையை ஏவியது.  . கலவரத்தை கட்டுப்படுத்த செல்போன் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பிஹார், ஜார்க்கண்ட், உத்தராகண்டிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த மாநிலங்களின் பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற போராட்டத்துக்கு ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவரும் லாலுவின் மகனு மான தேஜஸ்வி யாதவ் தலைமை தாங்கினார். பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அங்கு சாலை மற்றும் ரயில் மறியல்கள் நடைபெற்றன. ஒடிசா வில் மால்கன்கிரி, சுந்தர்கர் உள்ளிட்ட பகுதிகளில் மறியல் நடைபெற்றது. குஜராத்தில் காந்தி நகர், அகமதாபாத், சுரேந்தர் நகர், கட்ச் ஜாம் நகர் உள்ளிட்ட பல் வேறு நகரங்களிலும் மறியல் நடைபெற்றன. வடமாநிலங்களில் நேற்று 100 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.

கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசம், உத்தர பிரதேச மாநிலங்களுக்கு 800-க்கும் மேற்பட்ட அதிரடிப் படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வன்முறைக்கு இடமளிக்கக்கூடாது என்று தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “தாழ்த்தப்பட்டோர் மீது பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அடக்கு முறையை ஏவிவிட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

அதேபோல் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

 

கலவரத்தால் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நேற்று சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்தத் தேர்வுகள் வேறொரு நாளில் நடத்தப்படுகிறது.

 

இதனிடையே எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

 

எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் தனிநபர், அரசு ஊழியரை உடனடியாக கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அரசமைப்பு சட்டம் பிரிவு 21 வழங்கிய உரிமைக்கு எதிரானதாகும். இது தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட உரிமைகளை நீர்த்துப் போகச் செய்யும். ஏற்கெனவே இருக்கும் நிலையே தொடர வேண்டும். இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

 

இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப் போது மனுவை அவசர வழக்காக ஏற்க தலைமை நீதிபதி மறுத்து விட்டார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top