இன்றுடன் முடிகிறது உச்சநீதிமன்ற கெடு! ஏமாந்தது தமிழகம்! தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு

இன்றுடன் முடிகிறது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்ச நீதிமன்றம் விதித்த கெடு.. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்பார்த்து தமிழக அரசும் விவசாயிகளும் ஏமாந்து விட்டனர்

 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்.16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஒதுக்கப்பட்ட 192 டிஎம்சியில் இருந்து 14.75 டிஎம்சி குறைத்து, 177.25 டிஎம்சியாக ஒதுக்கப்பட்டது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை தீர்ப்பு வெளியான 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அரசுகள் நீதிமன்றத்தை நாட முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 

கடந்த பிப்.22-ம் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. இதில் திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

அதன்படி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதினார். ஆனால், பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. மார்ச் 9-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், பொதுப்பணித்துறை செயலாளர்களை அழைத்து மத்திய நீர்வளத் துறை ஆலோசனை நடத்தியது. இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்ச நீதிமன்றம் நேரடியாக குறிப்பிடவில்லை. தீர்ப்பை அமல்படுத்த ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றே குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர வேறு எதையும் ஏற்க முடியாது என தமிழகம் தரப்பில் வலி யுறுத்தப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து, மார்ச் 15-ம் தேதி மாலை தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் அனுப்பினார். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசால் எடுக்கப்படவில்லை.

 

இதுமட்டுமின்றி, மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 17 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக, திமுக எம்பிக்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர். தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தமிழக உயரதிகாரிகள் டெல்லி சென்று நேற்று முன்தினம் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். மூத்த வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்தினர். காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்கப்படாத பட்சத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய் வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன் றம் அளித்த 6 வார கெடு இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை புதன்கிழமை (நேற்று) கூடும் என்றும் அதில் காவிரி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாயின.

 

ஆனால், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எதுவும் பேசப்படவில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையே, காவிரி விவகாரம் தொடர்பான தீர்ப்பில் உள்ளது மேலாண்மை வாரியமா அல்லது வேறு ஏதேனும் ஓர் அமைப்பா என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓரிரு நாட்களில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top