டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை

 

டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

 

அதிமுகவில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை சந்திக்கும் வகையில் தற்காலிகமாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்கித் தர தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார். அத்துடன்,அனைத்திந்திய அம்மா அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக்கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் என்ற பெயர்களை அளித்து, இதில் ஒன்றை தங்களுக்கு வழங்கும்படியும் கோரியிருந்தது.

 

இந்த வழக்கில் கடந்த மார்ச் 9-ம் தேதி தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம், டி.டி.வி.தினகரன் தரப்புக்கு, ஒரு பொதுவான சின்னம் மற்றும் அவர்கள் விருப்பத்தின் படியான உரிய பெயரை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நேற்று டி.டி.வி.தினகரன் தரப்பை அழைத்து விளக்கம் கேட்டது. தினகரன் தரப்பில் ஆஜராகி உரிய சின்னத்தையும், கட்சி பெயரையும் பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கை டெல்லி நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இரட்டை ஒதிக்கீடு தொடர்பான வழக்கை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிவை அறிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top