ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்; மாணவர்கள் தலைமைச் செயலகம் முற்றுகை

 

 

தாழ்த்தப்பட்ட என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை குறைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும், கல்வி உதவித்தொகையை அந்தந்த நிதியாண்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் பெருமன்றம், அம்பேத்கர் கல்வி மாணவர் இயக்கம் உள்பட மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

 

அதன்படி, சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பு பெரியார் சிலை அருகே மாணவர்கள் கூடினர். ஆனால், மாணவர்கள் அங்கு கூடுவதை போலீசார் அனுமதிக்கவில்லை.

 

அதைத் தொடர்ந்து மாணவர்கள் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கம் அருகே ஒன்று கூடினர். பின்னர், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

 

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், தடையை மீறி மாணவர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி செல்ல முயன்றதால் மாணவர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

 

அதைத் தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர். மாணவர்கள் போராட்டத்தால் வாலாஜா சாலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

2011-ம் ஆண்டு தமிழக அரசு பொறியியல் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிட்டது. அந்த உத்தரவு, 2013-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. அதன்படி கலந்தாய்வின் மூலம் சேரும் மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரம் என்றும், நேரடியாக நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என்றும் உதவித்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. இது மாணவர்களின் கல்விக்கட்டணத்துக்காக மட்டுமே.

இதுபோக வீட்டில் இருந்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்காக ரூ.6 ஆயிரத்து 600-ம், விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு ரூ.14 ஆயிரத்து 400-ம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகை மாணவர்களை சென்றடைய குறைந்தது ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை ஆகிறது.

கடந்த வருடங்களில் பொறியியல் கல்லூரி சேர்க்கையில் ஏற்பட்ட தொய்வினால் பல கல்லூரிகள் நேரடியாக நிர்வாக ஒதுக்கீட்டில் ஆதி திராவிட மாணவர்களை சேர்க்க தொடங்கியது. ஒரு வகையில் மாணவர்களுக்கு எந்த வித சேர்க்கை கட்டணமும் இல்லை. அதே வேளையில், அரசிடமிருந்து மாணவர்களின் உதவித்தொகை பெற்றுக்கொள்வதன் மூலம் மந்த நிலையை சரிகட்டி விட முடியும் என கல்லூரி நிர்வாகங்கள் எண்ணின. இது பயனுள்ளதாகவே இருந்தது.நிறைய மாணவர்கள் சேர்ந்தார்கள்

திடீரென தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு மே மாதத்தில், பொறியியல் கல்வி கட்டணத்தை உயர்த்தியதோடு, உதவித்தொகையை நிர்வாக ஒதுக்கீடு மற்றும் கலந்தாய்வில் சேர்வதற்கு ரூ.50 ஆயிரம் என அரசு நிர்ணயம் செய்தது. இதனால் மீதமுள்ள தொகையை கட்ட முடியாமல் பலரும் பாதியிலேயே படிப்பை கைவிட முடிவு செய்தது தான் கொடுமை. இவை அனைத்தும் பணம் சார்ந்தது என்றாலும், இதனால் ஏற்படும் மாணவர்களின் மனஉளைச்சலுக்கு மருந்து இல்லையே.

உதவித்தொகை உரிய நேரத்தில் வருவதில்லை. எனவே, பல கல்வி நிர்வாகங்கள் பணம் செலுத்திவிட்டு உதவித்தொகை வரும்போது பெற்றுக்கொள்ளுங்கள் என மாணவர்களுக்கு வாய் மொழியாக உத்தரவிடுகிறது. தேர்வுக்கட்டணம், பராமரிப்பு செலவு இவற்றிற்கே சிரமப்படும் மாணவர்களால் கல்விக் கட்டணத்தை ஏற்பாடு செய்ய முடிவதில்லை. இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. ஒரு சிலர் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். சிலர் விபரீத முடிவுகளை கூட எடுக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த கஷ்டங்களையெல்லாம் கடந்து ஒரு மாணவன் படிப்பை முடித்தாலும், அவன் நிலைமை இதைவிட கவலைக்கிடமாக இருக்கிறது. ஏனென்றால், படிப்பை முடித்த மாணவர்கள் டி.சி., மார்க் சீட் பெற வேண்டுமானால் எந்த பாக்கியும் இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இது மாணவர்களுக்கு கடினமான ஒன்று.

அதே போன்று, மாணவர்களின் உதவித்தொகை வராத பட்சத்தில், எந்த உத்தரவாதத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் சான்றிதழை கொடுக்க முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது.

சென்னையில் ஒரு கல்லூரி இந்த உதவித்தொகையை நம்பி 1,700 மாணவர்களை சேர்த்துள்ளது. அந்த பணம் கிடைக்கவில்லை என்றால், கல்லூரி நிர்வாகமே ஸ்தம்பித்துவிடாதா? இவ்வாறு, மாணவனின் மன உளைச்சல் ஒருபுறம், கல்லூரிகளின் நிர்வாக பிரச்சினை ஒருபுறம் என கல்வி உதவித்தொகை தாமதத்தால் ஒரு சமுதாய முன்னேற்றமே தடைபடும் அபாயம் இருக்கிறது. இதை போக்க வேண்டிய கடமை அரசுக்குள்ளது.

மொத்தத்தில், ஆசை காட்டி மோசம் செய்வது போல் அரசும், சேர்த்த பின்னர் நிறம் மாறும் நிர்வாகமும் மாணவர்களின் கல்விக் கனவை அழிக்காமல் ஊக்குவித்து அவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே நம் எண்ணம். என பேராசிரியை ஆர்.காயத்ரி தெரிவித்திருக்கிறார்

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top