ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாநிலம் தழுவிய போராட்டம்; வெள்ளையன் பேச்சு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பேசினார்..

 

ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதையடுத்து நேற்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் பகுதியில் சுமார் 8 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன.

 

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 600 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடி நகரில் இயக்கப்பட்டு வந்த 47 மினி பஸ்களும் நிறுத்தப்பட்டன. சில ஆட்டோ, வேன், லாரிகளும் ஓடவில்லை. தூத்துக்குடி நகர் பகுதிகளில் உள்ள 8 தியேட்டர்களிலும் நேற்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஸ்டிக்கர்களையும் பொதுமக்கள் ஒட்டினர்.

 

மாலையில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்டது போல தூத்துக்குடியிலும் மக்கள் திரண்டனர். பள்ளி மாணவ- மாணவிகளும் திரளாக பங்கேற்றனர். இரவு வெகுநேரம் வரை போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது செல்போன் விளக்குகளை எரியவிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

 

கண்டன பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு கூறியதாவது:-

 

தன்மானத்தோடு இங்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்து உள்ளார்கள். மக்கள் உணர்வுகளை அரசு மதித்தே ஆக வேண்டும். இதற்கு பிறகும் மதிக்கவில்லையென்றால் தமிழ்நாடு வணிகர் சங்கம் இந்த போராட்டத்தை மாநிலம் தழுவிய போராட்டமாக எடுத்து செல்லும்.

 

ஸ்டெர்லைட் ஆலையை ஆட்சியாளர்களே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் வெற்றியை எட்டி பிடிக்க முடியும். முடியவில்லை என்றால் அனைவரும் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். அப்படி ஒரு போராட்டம் நடந்தால், நான் உங்களோடு போராட்டத்தில் இருப்பேன். ஜனநாயக ரீதியான போராட்டத்தை வன்முறை போராட்டமாக மாற்றி விடாதீர்கள். நாம் இன்னும் காந்தியத்தின் மீது நம்பிக்கை வைத்து உள்ளோம். எங்கள் நம்பிக்கையை வீணடித்து விடாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

முன்னதாக பொதுக்கூட்டத்தில் ஏராளமானவர்கள் திரண்டதால் பாளையங்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் பஸ்கர் அனைத்தும் திருச்செந்தூர் ரவுண்டானா, பைபாஸ் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top