சந்திரபாபு நாயுடு தலைமையில் 3வது அணி! ஏப்ரல் 7ம் தேதி முதல் கூட்டம்

 

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நிராகரித்த தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகியது. இதனைத் தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ், பாஜ அல்லாத மாநில அளவிலான கட்சிகளை ஒன்றுபடுத்தி 3வது அணி உருவாக சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார்.


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3வது அணி உருவாகிறது. இதன் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி அமராவதியில் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது.

 

காங்கிரஸ், பாஜ அல்லாத தேசிய அளவிலான 3வது அணி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உருவாக உள்ளது. இதற்காக சந்திரபாபு நாயுடு பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

 

தற்போது மத்திய அரசு மீது அவர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர நாடாளுமன்ற சபாநாயகரிடம் தனது கட்சி எம்பிக்கள் மூலம் நோட்டீஸ் வழங்கி உள்ளார். மேலும், இதே சமயத்தில் தனது 40 ஆண்டுகால அரசியல் சாணக்கியத்தையும் அரங்கேற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

 

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டிக்கொண்டே, தேசிய அளவில் 3வது அணியையும் அமைக்க நாயுடு திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி, அவர், நேற்று 11 கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சரத் பவார் (சோஷியலிஸ்ட் காங்கிரஸ்), மம்தா பானர்ஜி (திரிமுணால் காங்கிரஸ்), மாயாவதி (பிஎஸ்பி), ஸ்டாலின் (திமுக), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி), ஃபரூக் அப்துல்லா (நேஷனல் கான்பரன்ஸ்), அர்விந்த் கேஜ்ரிவால் (ஆம் ஆத்மி), நவீன் பட்நாயக் (பிஜேடி), ஓம் பிரகாஷ் சவுதாலா (இந்தியன் நேஷனல் லோக்தள்), அசோம் கணபரிஷத் (ஏஜிபி) ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்த 3வது அணியில் மேலும் சில கட்சிகள் அங்கம் வகிக்கும் என தெரிய வந்துள்ளது. இந்த 3வது அணியின் முதல் மாநாடு வரும் ஏப்ரல் மாதம் அமராவதியில், சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முக்கிய மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேசிய அரசியலில் மாபெரும் மாற்றம் ஏற்படும் என கருதப்படுகிறது.

 

 

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top