நாகர்கோவிலில் புயல் எச்சரிக்கை; 24 மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 18.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் அவர்கள் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் மழை சேதம் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம். நேற்று இரவு பெய்த மழையினால் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

குமரி கடல் பகுதியில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒருசில பகுதிகளில் மட்டும் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று கூறி உள்ளனர்.

மீனவர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற அனைத்து மீனவர்களும் கரை திரும்பி உள்ளனர். குமரியை சேர்ந்த மீனவர்கள் சிலர் மகராஷ்ட்ரா, கோவா, கேரளாவில் தங்கியும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

கப்பல்படை, கடலோர காவல்படை மூலமாக நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் கரை திரும்பிய மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top