கேராளாவைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா ஹோமியோபதி மருத்துவம் படித்துவரும் இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலன் ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பிடிக்காத ஹாதியாவின் தந்தை ஜகானுக்கு தீவிரவாத பின்புலம் இருப்பதால் இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும், ஹாதியாவை தனது வசம் ஒப்படைக்க வேண்டும் என ஹாதியாவின் தந்தை நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட் ஹாதியாவின் திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது. “24 வயதுப்பெண் மனதளவில் உறுதியாக இருக்க வாய்ப்பில்லை எனவே அவரை எளிதாக ஏமாற்றலாம்” என அந்த தீர்ப்பில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, ஜகானின் தீவிரவாத பின்புலம் குறித்த குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்தது.
கேரள ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஹாதியாவின் கணவர் ஜகான் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வு ஒரு பெண்ணுக்கு கணவன் பாதுகாப்பாக இருக்கமுடியாது என்ற வித்தியாசமான தீர்ப்பை வழங்கியது. ஹாதியா படித்து வரும் சேலம் கல்லூரியின் முதல்வர் அவருக்கு காப்பாளராக இருப்பார் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், இன்று ஹாதியாவின் திருமணம் செல்லாது என கேரள ஐகோர்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்துள்ளது. பெண்களுக்கு தங்களது வாழ்க்கைத் துணையை தேட முழு உரிமை உள்ளதாக அந்த தீப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.எனினும், ஜகான் மீதான குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்து விசாரிக்கும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.