கர்ப்பிணிப் பெண் மரணத்துக்கு காரணமான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருச்சி சிறையில் அடைப்பு

மனித உயிர்கள் விபத்தில் இழக்கக்கூடாது என்பதற்காக கட்டாய ஹெல்மெட் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்தும் விதம் தற்போது பலரது உயிர்களை பறித்து வருகிறது.

தினந்தோறும் இலக்கு நிர்ணயித்து ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் கட்டாய வசூல் நடத்தி வரும் போலீசாரின் செயல் நாம் அனைவர்க்கும் தெரிந்ததே. காவல்துறையின் மனிதாபிமானம் இல்லாத செயல்களால் பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர். அவ்வாறு, மனிதாபிமானம் இல்லாத அதிகாரப்போக்கினால் நடந்த அத்துமீறலில் தான் திருச்சி அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). இவரது மனைவி உஷா (36). கடந்த 10 வருடங்களாக குழந்தை இல்லாத உஷா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார். ராஜா தனது மனைவியுடன் நேற்று மாலை 6.30 மணி அளவில் தஞ்சையில் இருந்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ராஜாவின் வாகனத்தை மறித்து ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவசரத்தில் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

ஆனால் அவரை மற்றொரு போலீஸ்காரருடன் துரத்தி சென்ற இன்ஸ்பெக்டர் காமராஜ், பெல் கணேசா ரவுண்டானா அருகே ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறிய ராஜா நடுரோட்டில் மனைவியுடன் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் உஷா மீது மோதியது. அவருடைய கர்ப்பம் கலைந்து ரத்தம் வெளியேறி நிலையில் ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே உஷா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து, நேற்று இரவு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் கர்ப்பிணி பெண் கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டரை கண்டித்தும் அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை மத்திய துணை கமி‌ஷனர் சக்தி கணேசன் அவரைகளை நேரில் சந்தித்து பேசினார். உஷா உயிரிழப்பிற்கு காரணமான போலீஸ் அதிகாரி காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என உறுதி அளித்தார். ஆனாலும் அதனை ஏற்காத பொது மக்கள் செருப்பு, தண்ணீர் பாட்டில்களை அவர்கள் மீது வீசினர்.

கர்ப்பிணி பெண் கொலைக்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டவர்களை களைந்து செல்லுமாறு காவல் துறையினர் கட்டாயப்படுத்தினார். கலைய மறுத்ததால், அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

இதனால் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தடியடியில் 50-க்கும் மேற்பட்டோர் மண்டை உடைந்து காயம் அடைந்தனர். மேலும், 5 பேர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

இந்த நிலையில், கர்ப்பிணிப்பெண் மரணத்துக்கு காரணமான துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மீது 304(2) மனித உயிர்க்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தாக்குதல், 336 பலத்த காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை 7 மணியளவில் நீதிபதி ‌ஷகிலா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வருகிற 21-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top