காவிரி பிரச்சனையில் பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் தமிழக அரசு சிக்கிவிடக்கூடாது: திருமாவளவன்

காவிரி நதிநீர் பங்கிட்டு உரிமை பிரச்சினை தொடர்பான வழக்கில் கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்ட 192 டிஎம்சியைவிட 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

‘ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைவதற்கு 20 நாட்களே உள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவாதிப்பதற்கு 4 மாநிலங்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

‘காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் இறுதிக்குள் அமைப்போம்’ என மத்திய அரசு இதுவரை உறுதியாகக் கூறாத நிலையில், இப்படி 4 மாநில பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது காலம் தாழ்த்துவதற்கான தந்திரமாகவே தெரிகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை எப்படி அமைக்க வேண்டும், அதில் எத்தனை உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், அவர்களுக்கான தகுதி எப்படி இருக்க வேண்டும், மேலாண்மை வாரியத்தின் செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என அனைத்து விவரங்களையும் காவிரி நடுவர் மன்றம் விரிவாக வரையறுத்துள்ளது. எனவே, அது தொடர்பாக மீண்டும் விவாதிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை ஆலோசனைக் கூட்டம் என்கிற பெயரில் அழைப்பு விடுப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் சாக்குபோக்கு சொல்வதற்கே வழிவகுக்கும்.

எனவே, பிரதமரிடமிருந்து இதுதொடர்பான வாக்குறுதி எதுவும் வராதபோது இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது மத்திய அரசின் தந்திரத்துக்கு தமிழகம் பலியாகப்போவது பொருள்படும். எனவே, தமிழக அரசு இதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்கக் கூடாது, பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் சிக்கிவிடக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் விவசாய சங்கங்களும் தமிழக அரசோடு ஒன்றுபட்டு நிற்கும் நிலையில் இது தொடர்பான எந்த முடிவையும் எல்லோரையும் கலந்தாலோசித்தே தமிழக முதல்வர் எடுக்க வேண்டும்” என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top