பணம் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களின் சொத்து பறிமுதலுக்கு புதிய சட்டம்

 

பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பல்லாயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு, பல தொழில் அதிபர்கள் வட்டிகூட  திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவது வாடிக்கையான கதை ஆகி வருகிறது பாஜக ஆட்சியில்!

 

பாஜக அரசு இந்த விசயத்தில் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் சொல்லமுடியாமல்,எதாவது செய்யவேண்டிய நிலையில் இருப்பதால் இப்போது ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது.

 

பொதுத்துறை வங்கிகளில் இருந்து திட்டமிட்டு பல்லாயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகிற தொழில் அதிபர்களை விட்டு வைக்கக் கூடாது, அவர்களுக்கு கடி வாளம் போட வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானித்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

 

அந்த வகையில் நாட்டை விட்டு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் மீதான வழக்குகளில், அவர்கள் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை வழங்குவதற்கு முன்பாகவே அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகை செய்யும் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்தது.

 

அதன் அடிப்படையில் ‘தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா-2008’ என்ற பெயரில் ஒரு சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

இந்த மசோதா வரும் 5-ந் தேதி தொடங்குகிற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இது தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நிருபர்களிடம் பேசினார்.

 

அப்போது அவர், “தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா-2018 கொண்டு வரப்பட்டதின் நோக்கம், அவர்களின் பினாமி சொத்துகள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்வதுதான். இந்த மசோதாவில், இந்தியாவுக்கு வெளியே உள்ள சொத்துகளையும் பறிமுதல் செய்வதற்கு வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

 

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

 

* ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை வங்கிகளில் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகிற அனைவரும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள்.

 

* உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். பினாமி சொத்துகளும் இதில் அடங்கும்.

 

* வழக்குகளை எதிர்கொள்வதற்கு குற்றவாளிகள் இங்கே வருவதற்கு கட்டாயப்படுத்தப்படும்.

 

* தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் வழக்கு களை விசாரிக்க தனி கோர்ட்டுகள் அமைக்கப்படும். இந்த கோர்ட்டுகள் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு பிடிவாரண்டு பிறப்பிப்பதுடன், அவர்களை தப்பி ஓடிய பொருளாதார குற்ற வாளிகளாக அறிவிக்கும்.

 

இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.

 

கணக்கு தணிக்கை தொழில் செய்து வருகிற ஆடிட்டர்களை ஒழுங்குபடுத்துவதற்கு என்.எப்.ஆர்.ஏ. என்னும் தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையம் அமைக்கப்படுகிறது. இது தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்கும். இந்த ஆணையத்துக்கு ஒரு தலைவரும், 3 முழு நேர உறுப்பினர்களும் இருப்பார்கள். ஒரு செயலாளரும் இருப்பார்.

 

இந்த ஆணையம் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்தவும் உதவும். சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ற விதத்தில் உலகமயமாக்கப்பட்ட வணிகத்துக்கும் தனது ஆதரவை வழங்கும்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top