2019-ம் ஆண்டுக்கு பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுக்க உள்ளேன் – யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் (36) இந்திய கிரிக்கெட் அணிக்காக கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அதன் பின், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய அவர், அந்த தொடரில் சரியான ஆட்டத்தை மேற்கொள்ளாததால் இந்திய அணி பங்கேற்கும் தொடர்களில் அவர் பங்கெடுக்க முடியாமல் போனது ஆதலால் மீண்டும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு திரும்புவதற்காக கடும் பயிற்சிகள் மேற்கொண்டு வரும் யுவராஜ் சிங், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் ஐபிஎல் டி 20 தொடரை பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்து வருகிறார்.

இந்நிலையில் மொனாக்கோவில் நடைபெற்ற லாரஸ் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற யுவராஜ் சிங் கூறியதாவது:

ஐ.பி.எல். போட்டி தொடரை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன். இது எனக்கு மிகவும் முக்கியமானது. 2019-ம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அதன் பிறகே ஓய்வு குறித்து முடிவு செய்ய உள்ளேன்.

தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது. டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்திய வீரர்களிடம் இருந்து சிறந்த குணம் வெளிப்பட்டது. கடினமாக போராடிய டெஸ்ட் தொடராக இருந்தது.

கேப்டனாக விராட் கோலி முன்னின்று அதிக ரன்கள் குவித்து சிறப்பாக வழிநடத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். வெளிநாட்டு மண்ணில் 3 தொடர்களில் இரண்டை வென்று இருப்பது இந்திய அணியின் ஆதிக்கத்தை காட்டுகிறது. வெளிநாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்வதற்கு இது நல்ல தொடக்கமாகும்.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top