நடிகை ஸ்ரீதேவி உடல் துபாயிலிருந்து மும்பை வந்தது: இன்று இறுதிச்சடங்கு; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார்.

இந்நிலையில், 24-ம் தேதி கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவியின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக போனி கபூர் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழக்கவில்லை. குளியலறை தொட்டியின் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்தனர். “குளியலறைக்கு சென்றபோது சுயநினைவிழந்த ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக நீர் நிறைந்த தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்” என்று போனி கபூரிடம் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

விசாரணைக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதிக்கடிதம் அளித்தது. பின்னர் அவரது உடல் எம்பால்மிங் செய்யப்பட்டு துபாய் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடலை எடுத்துச் செல்வதற்காக தொழிலதிபர் அனில் அம்பானி தனது சொந்த விமானத்தை கடந்த 25-ம் தேதியே துபாய்க்கு அனுப்பி வைத்தார். 13 இருக்கை வசதி கொண்ட அந்த விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. கணவர் போனி கபூர், அவரது முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர் ஆகியோர் அதே விமானத்தில் மும்பை வந்தனர். மும்பை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீதேவியின் உடல் போனி கபூரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று (புதன்கிழமை) காலை அந்த பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் இறுதி ஊர்வலம் நடக்கிறது. மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மயானத்தில் அவரது உடல் பிற்பகல் 3.30 மணி அளவில் தகனம் செய்யப்படுகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top