சென்னை ஐஐடி.-யில் நடந்த விழாவில் சமஸ்கிருத பாடல்: ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

சென்னை ஐ.ஐ.டி.-யில் நேற்று மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில், சமஸ்கிருத பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல், சமஸ்கிருதம் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அரசியல் கட்சித் தலை வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:

சென்னை ஐஐடி-யில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தே பாடாமல், ‘மகா கணபதி’ என்று தொடங்கும் மதப் பாடலை வடமொழியில் பாடியுள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரிலேயே தமிழைப் புறக்கணித்து, வடமொழிப் பாடலைத் திணித்தது எவ்விதத்திலும் மன்னிக்கக்கூடியது அல்ல. தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடவிடாமல் அவமதித்த ஐஐடி நிர்வாகிகளுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் அவர்களை நீக்கம் செய்ய வேண்டும். சென்னை ஐஐடி அரசு விழாவில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டதற்கு மத்திய மந்திரிகள் நிதின் கட்காரியும், பொன். ராதாகிருஷ்ணனும் மன்னிப்பு கேட்கவேண்டும்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:

சென்னை ஐ.ஐ.டி.-யில் நேற்று மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில், தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருத மொழியில் மதம் சார்ந்த இறைவணக்கப் பாடல் இசைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற உயர்கல்வி நிறுவனத்தில் மதத்தைப் போற்றும் பாடல் இசைக்கப்பட்டிருப்பது, திட்டமிட்ட செயலாகவே தெரிகிறது.

இந்தியாவின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மைதான். அதனைச் சிதைக்கும் நோக்கம் கொண்ட அணுகுமுறையை, மத்திய பாஜக ஆட்சியாளர்கள் இனியாவது கைவிடவேண்டும். சென்னை ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு மத்திய அரசு வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய தவறுகள் நேராதிருக்க உறுதியளிக்க வேண்டும்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது:

தமிழ்நாட்டுக்கு உட்பட்ட எந்த அரசு நிறுவனமாக இருந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது கட்டாயமாகும். அதைத் தவிர்த்துவிட்டு சமஸ்கிருதப் பாடலைக் கடவுள் வாழ்த்தாகப் பாடுவது சட்ட விதிமீறலாக அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். சென்னை ஐஐடி-யின் தமிழ் விரோதப் போக்கினை எதிர்த்து திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை விரைவில் நடத்தும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுவதும், மத்திய அரசு நிறுவனங்களில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதுதான் நடைமுறையில் உள்ளது. ஆனால், இவை இரண்டும் இல்லாமல் சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற அரசு விழாவில் சமஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது.

பாஜக ஆட்சியாளர்களின் இத்தகைய சமஸ்கிருதத் திணிப்பு மற்றும் மதவாதப் போக்கினை தமிழ்நாட்டில் அனுமதிக்காத வகையில் அனைவரும் குரலெழுப்ப வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு விழாக்களாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் இசைக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதற்கு மாற்றாக சமஸ்கிருத வாழ்த்து பாடப்பட்டுள்ளது. அதற்கு மாறாக சமஸ்கிருத வாழ்த்துப் பாடலை திட்டமிட்டு இசைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழை புறக்கணிக்கும் வகையில் சமஸ்கிருதப் பாடலை இசைத்ததற்காக சென்னை ஐஐடி நிர்வாகம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னை ஐ.ஐ.டி.-யில் சமஸ்கிருதம் படப்பட்டதை அடுத்து பாஜகவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் வெங்கடேசன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top