மேகாலயா – நாகாலாந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

60 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் கடந்த 18-ம் தேதி வில்லியம்நகரில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனதன் சங்மா வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் மற்ற 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல் நாகாலாந்து மாநிலத்தில் வடக்கு அங்கமி-2 தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் (என்டிபிபி) தலைவர் நீபியூ ரியோ போட்டியின்றி அவரது தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் மீதமுள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அசாம், மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் பாஜக ஏற்கெனவே ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதுபோல காங்கிரஸ் தரப்பிலும் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்தனர். கடந்த 10 ஆண்டுகளாக மேகாலயாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸுக்கு, இந்த ஆட்சியை தக்கவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

மேகாலயாவில் முதல் முறையாக பெண்களுக்காக 67 வாக்குச்சாவடிகள் மற்றும் 61 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் 32 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேகாலயாவில் 18.4 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 3,083 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.

இதுபோல, நாகாலாந்தில் பாஜக 20 தொகுதியிலும் அதன் கூட்டணி கட்சியான என்டிபிபி 40 தொகுதியிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. மொத்தம் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 11.91 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 2,156 வாக் குச் சாவடிகள் அமைந்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு இந்தியா முழுவதும் உள்ள அணைத்து மாநிலங்களிலும் இராணுவ நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில காவல் துறையினருடன் மத்திய ஆயுத காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திரிபுரா சட்டப்பேரவைக்கு ஏற்கெனவே தேர்தல் முடிந்துவிட்டது. இதையடுத்து, இரு மாநிலங்களிலும் இன்று பதிவாகும் வாக்குகளையும் சேர்த்து, இந்த 3 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top