ஸ்ரீதேவி இறப்பு பற்றிய தகவல்: உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கை வெளியானது

துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார்.

கடந்த 24-ம் தேதி இரவு ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மரணமடைந்துவிட்டதாக கூறப்பட்டது. அவரது உடலை உடற்கூறாய்வுக்கு பின்னே தரப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்வாகம் தெரிவித்து விட்டது.

உடற்கூறாய்வு மட்டுமல்ல தடயவியல் சோதனையும் நடத்தப்பட்டது. இதனால் ஸ்ரீதேவியின் உடலை துபாயிலிருந்து மும்பை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் உடற்கூறாய்வு முடிந்தது. தடயவியல் அறிக்கையும் வெளியானது. அதில் குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்துள்ளதாக தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குளியல் அறையில் நெஞ்சுவலி ஏற்பட்டு தொட்டியில் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீதேவியின் மரணம் நீரில் மூழ்கிய விபத்து மரணம் என்று தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் சதிச்செயல் எதுவும் இல்லை என்று துபாய் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஸ்ரீதேவியின் ரத்தத்தில் மது அருந்தியதற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் உள்ள பிரச்சினை நீக்கப்பட்டு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். மரணச்சான்றிதழும் வழங்கப்படும். இன்று இரவுக்குள் ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்துவிடும் என்று கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top