காவிரி நீர் பிரச்னை; பிரதமரை நேரில் சென்று சந்திக்க அனைத்துக்கட்சி தலைவர்கள் அடுத்தவாரம் டெல்லி பயணம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 16-ந்தேதி தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகத்துக்கான காவிரி நீர் ஒதுக்கீடு அளவு 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு கர்நாடகத்துக்கு சாதகமாகவும், தமிழகத்துக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் 2 லட்சம் ஏக்கர் பாசனபரப்பு பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

அதே சமயம் காவிரி நீர் திறந்து விடுவதை கண்காணிக்க மத்திய அரசு 6 வாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பழைய காவிரி நீர் ஒப்பந்தம் செல்லும், நதிகள் எந்த மாநிலத்துக்கும் சொந்தம் இல்லை, யாரும் உரிமை கோர முடியாது என்று தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களும் தீர்ப்பில் இடம் பெற்றுள்ளது.

காவிரி நீர் வாரியம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழிகக அரசு மதித்த அரசுடன் முறையிட்டு வருகிறது. உச்ச நீதி மன்றம் காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசிடம் உத்தரவு பிறப்பித்தும், காவிரி வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது., மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சென்று காவிரி மேலாண்மை அமைத்திடக்கூடாது என வலியுறுத்த போவதாக கர்நாடக முதலைமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழக அரசு அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக ஆலோசிக்க சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியை அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்க தலைவர்கள் அடங்கிய குழு சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த முடிவை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று உறுதி அளித்தார்.

ஏற்கனவே தீர்ப்பு வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்டது. இன்னும் 5 வாரம் தான் இருக்கிறது. இதில் மத்திய அரசு காலதாமதம் செய்ய எந்த விதத்திலும் அனுமதிக்க கூடாது என்றும் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள் உடனடியாக பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அடுத்த வாரம் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கி தரப்படும் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு மும்மரமாக செய்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top