‘மக்கள் நீதி மய்யம்’ கமல் கட்சியின் பெயர் மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின்னர் கட்சியின் பெயர், ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார்..

 

நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இன்று தொடங்கினார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.

 

ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரை வந்தடைந்த கமல், இரவு 7.15 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுரை ஒத்தக்கடை மைதானத்தை வந்தடைந்தார். அப்போது தன் காரில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் அழைத்து வந்தார். அதன்பின்னர் பொதுக்கூட்டம் தொடங்கியது.

 

இயக்குனர் ராசி அழகப்பன், கவிஞர் சினேகன் பேசியதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மேடைக்கு வந்த கமல், தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 

வெள்ளை நிற பின்னணியில் சிவப்பு நிறத்தில் கைகள் இணைந்திருப்பது போன்றும், நடுவில் கருப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற  நட்சத்திரம் உள்ளது போன்றும் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

அதன்பின்னர் கட்சியின் பெயரை கமல் அறிவித்தார். ‘மக்கள் நீதி மய்யம்’ என்று கட்சியின் பெயரை கமல் அறிவித்ததும் ரசிகர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பினர்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top