ஆந்திராவில் 5 தமிழர்கள் மரணம் – உறவினர்களிடம் ஒப்புதல் இல்லாமலேயே பிரேத பரிசோதனை என உறவினர்கள் புகார்

ஆந்திர மாநிலம் கடப்பா ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். உயிரிழந்த தமிழர்களின் சிலரது உடல், கை, கால்களில் காயங்கள் இருந்தன. மேலும் இந்த ஏரியில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவர்களின் சடலங்களை போலீஸார் மீட்டு, கடப்பா அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் நேற்று சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் தமிழக போலீஸார் முன்னிலையில் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

ஆனால், சம்பந்தப்பட்ட உறவினர்களின் ஒப்புதலை பெற்றோ அல்லது வருவாய் துறையினர் முன்னிலையிலோ பிரதேப் பரிசோதனை செய்யப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், மதுரையில் செயல்படும் மக்கள் கண்கணிப்பு அமைப்பு சார்பில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இது குறித்து ரவி என்பவர் கூறியதாவது:-

5 பேர் உயிரிழந்த ஏரியில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே இருந்துள்ளது, அதாவது தண்ணீர் மிகக் குறைவாக
இருந்து உள்ளது. மேலும், இறந்தவர்கள் அனைவரும் கிராமப் பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சிறு வயது முதலே நீச்சல் தெரியும். எனவே, அவர்கள் நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும், பிரேதப் பரிசோதனை செய்ய உறவினர்களின் கையொப்பமோ அல்லது ஒப்புதலோ தேவை. ஆனால், உடல்கள் அனைத்தும் அழுகிய நிலையில் உள்ளன எனும் ஒரே காரணத்தை காட்டி, யாருடைய ஒப்புதலும் இன்றி, முன்கூட்டியே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் பார்க்கும்போது இது திட்டமிட்ட சதி என்றே தோன்றுகிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆந்திர அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top